பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

47

புலம்பி யிருக்கமுடியும்?” என்று ஒரு பெரிய போடாகப் போட்டு நம்மைத் திணற அடித்து விடுவார்கள்! நிற்க.

நமது சிரஞ்சீவி விபீஷண ஆழ்வார் நெடுங்காலம் இலங்கையை ஆண்டு வந்த பிறகு கலியுகம் தொடங்கிற்று. உடனே விபீஷணரின் கவலையும் தொடங்கிற்று. சீதையும் இராமருமாகச் சேர்ந்து நம்மை இப்படி மோசம் செய்து கெடுத்து விட்டார்களே என்று வருந்தினார். இந்த உலகில் என்றென்றைக்கும் இருக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்களே என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். அதிலும் ஸ்ரீராமர் என்ன சொன்னார்?

இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம்!

இந்தா! இந்தா! இந்தா!

என்று பல்லவி, அநுபல்லவி, சரணங்களாகச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்! அவருக்கென்ன சொல்வதற்கு? இந்த இலங்காபுரி ராஜ்யத்தை என்றென்றைக்கும் யார் கட்டிக்கொண்டு மாரடிப்பது?... இப்படிக் கவலைப் பட்டுக்கொண்டே விபீஷண ஆழ்வார் கலியுக ஆரம்பத்தில் கொழும்புக்கு அருகில் உள்ள ஒரு குன்றின் குகையில் படுத்து அண்ணன் கும்பகர்ணனுடைய தொழிலை மேற்கொண்டார். தமிழர்களின் தொழிலை மேற்கொண்டார் என்று சொல்வதும் தவறாகாது.

ராட்சதர்களுடைய காலக்கணக்கின்படி ஒரு ஜாம நேரம் தூங்கிவிட்டு எழுந்து பார்த்தால், இலங்கையில் எல்லாம் மாறுதலாயிருக்கக் கண்டார். அவர் தூங்கும் சமயத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. தூங்குகிறவனுடைய தொடையில் கயிறு திரிப்பவர்கள் அல்லவா ஐரோப்பியர்கள்? முதலில், போர்ச்சுகீயர்