பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

51

வைகுண்டத்துக்குப் போய் முறையிடுவதா?” என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

இதைக் கேள்விப்பட்டதும் விபீஷணரைப் பற்றிய கவலையில் நான் ஆழ்ந்தேன். முருகனைப் பற்றிய கவலை தோன்றிய பிறகுதான் அவரை மறக்க முடிந்தது.

ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரு மனிதருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதையறிந்த சிநேகிதர் ஒருவர் வந்து தமது அநுதாபத்தைத் தெரிவித்தார். “உமக்குக் கூச்சல் என்றால் பிடிக்காதே ! இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கூச்சல் போட்டால் பெருந் தொல்லையாயிருக்குமே?” என்று கேட்டார். “அது தான் இல்லை! ஒற்றைக் குழந்தையாக இருந்தால்தான் கூச்சல் தொந்தரவு. இரண்டு குழந்தைகள் சேர்ந்து கூச்சலிடும்போது ஒன்றின் கூச்சல் இன்னொன்றின் கூச்சலில் மறைந்துவிடும் அல்லவா?” என்று சொன்னார் இரட்டைக் குழந்தையின் புத்திசாலித் தகப்பனார்.

இதுபோலவே முருகனைப் பற்றி எனக்கு ஏற்பட்ட கவலையினால் விபீஷணரின் கவலையை நான் மறக்கலாயிற்று.

ரத்மனாலை விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியதும் அங்கே கூடியிருந்த நண்பர்களின் முகங்களுக்கு மத்தியில் ஒரு முகம் பளிச்சென்று மலர்ச்சியுடன் காட்சி தந்தது. யாரோ தெரிந்தவராய்த்தான் இருக்குமென்று அவரைப் பார்த்துப் புன்னகை செய்துவைத்தேன். உடனே அவரும் புன்னகை செய்து, நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும். தெரியுமா? கோவிலுக்குக் கட்டாயம்