பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இலங்கையில் ஒரு வாரம்

கவலைப்பட மாட்டார்கள். ஆயிரம், பதினாயிரம் பேரில் ஒருவர் இருவர் குறைந்து போனால் என்ன பிரமாத நஷ்டம்? ஒருவேளை நாம் இடறி விழும்போது பக்கத்தில் ஒரு ஆசிரியர் அல்லது கல்விமான் இல்லாமற் போனாலும், நாம் தரையில் விழுந்துவிட முடியாது. யாழ்ப்பாண நகரத்துக்குள் ஒரு சாலையிலோ, ஒரு வீதிலோ தரையில் விழுந்து வைக்கலாம் என்ற ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. ஏனெனில் அப்படி நீங்கள் இடறிக் கீழேவிழப் போகிறீகள் என்பதற்கு அறிகுறி காணப்பட்டவுடன் ஒரு சுகாதார அதிகாரி ஓட்டமாய் ஓடி வந்து நீங்கள் தரையில் விழாமல் தாங்கி எடுத்துக் கொண்டுபோய் உங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பார்!

குப்பைத் தொட்டியில் போடும் உரிமை பத்திரிகாசிரியர்களுக்குத்தான் உண்டு என்று அதுகாறும் எண்ணி யிருந்தேன். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளுக்கும் அந்த உரிமை உண்டு என்று தெரிந்தது. பத்திரிகாசிரியர்கள் கதை கட்டுரைகளை மட்டும்தான் குப்பைத் தொட்டியில் போடுவார்கள். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளோ அந்தக் கதை கட்டுரைகளை எழுதியவர்களைக்கூடக் குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டு விடுவார்கள்!

இது எப்படி எனக்குத் தெரிந்தது என்றால், யாழ்ப்பாணத்தில் நானும் ஸ்ரீ தூரனும் தங்கியிருந்த இரண்டு தினங்களில், ஒரு நாள் மாலை போலீஸ் அதிகாரியைப் போல் உடுப்புத் தரித்த ஒருவர் வந்தார். “ஐயா! இந்த ஊர் ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது, நீங்கள் ஐந்து நிமிடம் வந்து சமுகம் தர வேண்டும்!” என்றார். என் காதுகளை நான் நம்பவில்லை. எப்போதுமே என்