பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

ருநாள் எனது நண்பர் ஒருவர் தலைவிரி கோலமாக ஓடி வந்தார். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடி வந்ததால்தான் அவர் தலையெல்லாம் கலைந்து, அப்படித் தலைவிரி கோலமாகக் காட்சியளித்தது. ஓடி வந்த மனிதர் என்னிடம் ஒரு கேள்வியைப் போட்டார். கல்கி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீமான் கல்கி இலங்கைக்குப் போனாரல்லவா?...... என்றார்.

“ஆமாம் போனார். போய்விட்டு வந்து தானே ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் கட்டுரைகூட எழுதுகிறார். போகாமலேயே எழுதுகிறார் என்று சந்தேகப் படுகிறீரா ?” என்றேன்.

“அதற்குச் சொல்லவில்லை ஐயா! போன மனிதர் ஏன் இப்படித் திரும்பி வந்து விட்டார்” என்றார்.

நான் மிகவும் கோபத்துடன் அவரை முறைத்துப் பார்த்தேன். அவரும் என்னுடைய கோபத்திற்குரிய காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டார்.

“இல்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு இலங்கைக்குப் போனாரே! ஒரு வாரத்திலேயே என் திரும்பினார். கூட இரண்டு மூன்று வாரம் இருந்து விட்டு வரக்கூடாதா? நமக்கெல்லாம் இலங்கையைப் பற்றி இன்னும் ஏராளமாக எழுதலாமே!” என்று சலித்துக் கொண்டார்.

‘கல்கி’ அவர்களின் “இலங்கையில் ஒரு வாரம்” கட்டுரையைப் படித்தவர்கள் எல்லோருக்குமே அவர் “இன்னும் எழுத மாட்டாரா? இன்னும் எழுத மாட்டாரா?” என்று ஆவல் ஏற்படத்தான் செய்யும்.

நாம் இலங்கைக்குப் போகவேண்டுமென்றால் பல தொந்தரவுகள் உண்டு .