பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இலங்கையில் ஒரு வாரம்

பேரின்பநாயகம் கையில் ஒரு தடி வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பத்து வருஷத்துக்கு முன்னால் ஸ்ரீ பேரின்ப நாயகத்தை நான் பார்த்த போது அவர் கையில் பிரம்பு இல்லை; இப்போது இருந்தது. அப்போது அவர் பள்ளிக்கூட ஆசிரியர் அல்ல. ஆனால் இப்போது ஹிந்து ‘கோலேஜ்’ தலைமை ஆசிரியர்.

“ஆகவே இந்தக் கைக் தடியினால் உங்கள் பள்ளிக் கூடத்தில் தொழில் நடத்துவீர்களோ? பிள்ளைகளை அடித்து வெளுத்து விடுவீர்களோ?” என்றேன்.

“அதெல்லாம் இங்கே நாங்கள் பிள்ளைகளை அடிக்கிற வழக்கம் இல்லை !!” என்றார் ஸ்ரீ பேரின்ப நாயகம்.

“அப்படியானால் பெற்றோர்களைத்தான் அடிப்பீர்களோ?” என்று பீதியுடன் கேட்டேன்.

“பெற்றோர்களையும் நாங்கள் அடிக்க மாட்டோம்.........”

“பின்னே, உங்கள் கையில் தடி இருப்பது எதற்காக?”

“காலில் கொஞ்சம் நீர் கட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால் சிறிது சாய்ந்து நடக்க வேண்டியிருக்கிறது. நடப்பதற்கு உதவியாக இந்தத் தடியை வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

“நீங்கள் சாய்ந்து நடப்பதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது!” என்றேன்.

அந்தக் குறிப்பை அறிந்து ஸ்ரீ ஹாண்டி பேரின்பநாயகம் நானும், ஸ்ரீ பெரியசாமித் தூரனும் ஊருக்குப் புறப்படுகையில் தலைக்கு ஒரு அழகிய கைத்தடி பரிசாகக் கொடுத்தார்.