பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாஸ்போர்ட் வாங்கவேண்டும். விஸா வாங்கவேண்டும். பாஸ்போர்ட்டுக்கும் விஸாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தவேண்டும். சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கேட்கும் கேள்விகளைக் கேட்டுப் பைத்தியம் பிடிக்காமல் தப்பிப் பிழைத்துப் போய்ச்சேர வேண்டும்.

ஆயிரம் வருஷங்களுக்குமுன் பழையாறைச் சுந்தர சோழன், சைன்யங்களையும் கொன்றை மரங்களையும் திரட்டிக்கொண்டு இலங்கைக்குப் போய் “ஜனநாத புரத்தை” நிர்மாணிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம், நாம் பாஸ்போர்ட்டும் விஸாவும் வாங்குதற்குச் செய்யும் முயற்சிகளின் காலில் கட்டியடிக்கக் கூடக் காணாது.

ஆனால் இனிமேல் இலங்கைக்குப்போய் பார்த்து விட்டு வர வேண்டுமானால் ஒருவிதச் சிரமமுமில்லை. நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு, இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் போதும். இலங்கையையும் சேய்நாடாகிய யாழ்ப்பாணத்தையும், சுற்றிப் பார்க்கலாம். அங்குள்ள தலைவர்களுக்குச் ‘சமுகம்’ கொடுக்கலாம். அவர்களுடைய தமிழ்மணம் கமழும் புகை மணத்தை நுகரலாம்.

அடடே! நீங்கள் தான் ஏற்கெனவே புத்தகத்தைக் கையிலெடுத்து விட்டீர்களே. நான் என் குறுக்கே நிற்கவேண்டும்?

1-1-54-
தி.நகரம்
பழ. சிதம்பரன்
உரிமையாளர், பாரதி பதிப்பகம்.