பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

இலங்கையில் ஒரு வாரம்


இவருக்கு ஊர் பருத்தித்துறை என்றும், இவரும் ஓர் ஆசிரியர்தான் என்றும், பெயர் திரு. ஏரம்பமூர்த்தி என்றும் அறிந்தேன்.

பெயர், இதற்கு முன் கேள்விப் பட்டிராத பெயராயிருந்தது.

“ஐயா! நீங்கள் பேச வேண்டியதேயில்லை!” என்றார், திரு. ஏரம்ப மூர்த்தி.

இல்லை, நான் பேசவில்லை! என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டேன்.

“நிச்சயமாக நீங்கள் பேச வேண்டியதில்லை!” என்றார் மறுபடியும்.

“இல்லை நான் பேசவே இல்லை!” என்று மீண்டும் கூறினேன்.

“உண்மையாகத்தான் சொல்லுகிறேன்; நீங்கள் பேசவேண்டாம்! தெரிகிறதா” என்றார் பருத்தித் துறையார்.

உள்ளத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். அப்பேர்ப்பட்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் இந்தியாவை ஆண்ட காலத்தில் “நீர் பேசக்கூடாது!” என்று 144-வது பிரிவின்படி எனக்கு உத்தரவு போட்டார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. உத்தரவைக் கையில் வைத்துக் கசக்கிக் கொண்டே பேசித் தீர்த்தேன். அப்படிப்பட்ட என்னை இந்த இலங்கைத் தீவில் “பேசக்கூடாது!” என்று கட்டளையிடுவதற்கு இந்த மனிதர் யார்? இவருக்கு என்ன அதிகாரம்? ஸ்ரீ சேனநாயகாவின் சுவீகார புத்திரர் என்று தம்மை இவர் நினைத்துக் கொண்டாரா? இவ்விதம் எண்ணிப் பொருமினேன்.