பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

இலங்கையில் ஒரு வாரம்

கோயிலைப்போல் அவ்வளவு பெரியதாயிருந்ததாம். சேதுக்கரையில் நின்று பார்த்தால் கோபுரம் தெரிந்ததாம். எனவே, ஸ்ரீ சம்பந்தரும் சுந்தரரும் இராமேசுவரக் கடற்கரையில் நின்று தரிசித்துத்தான் திருக்கேதீசுவரத்தைப் பற்றிப் பாடினார்கள் என்பது ஒரு சாராரின் கருத்து.

ஆனால் இது தவறான கருத்து என்று நான் எண்ணுகிறேன். ஸ்ரீ ஞானசம்பந்தரும் சுந்தரரும் இலங்கையிலுள்ள சிவஸ்தலங்களுக்குப் போய்த் தரிசித்திருந்தால்தான் அவ்வளவு தத்ரூபமாய்ப் பாடியிருக்கமுடியும். கடல்கடந்து செல்வது ஆசாரத்துக்கு விரோதம் என்ற குருட்டுக்கொள்கை பிற்காலத்தில் தமிழகத்தில் தோன்றியது. எனவே சம்பந்தரும் சுந்தரரும் கடல் கடந்து போயிருக்கவே மாட்டார்கள் என்று வைத்துக்கொண்டு இந்தக் கரையிலிருந்தே பாடினார்கள் என்று கற்பனை செய்திருக்கவேண்டும்.

இதன் உண்மை எப்படியானாலும் சம்பந்தர் காலத்திலேயே இலங்கையின் வட பகுதியில் பிரசித்தமான சிவாலயங்கன் இருந்தன என்று ஏற்படுகிறதல்லவா? சம்பந்தருடைய காலம் இன்றைக்கு 1,300 வருஷங்களுக்கு முன்பு என்பது சரித்திரத்தில் முடிவு கண்ட உண்மை. எனவே, அதற்கும் முற்பட்ட மிகப் பழமையான காலத்தில் தமிழர்கள் இலங்கையில் குடியேறிச் சைவ சமயத்தை வளர்த்துச் சிவாலயத் திருப்பணிகளும் செய்திருக்க வேண்டும்.

திருக்கேதீசுவரம் ஆலயம் இப்போது அழிந்து பாழ் பட்டுக் கிடக்கிறது. காலம் என்னும் அரக்கனோ, யுத்தம் என்னும் பூதமோ அல்லது மதத் துவேஷம் என்னும் பிசாசோ அந்த ஆலயத்தை விழுங்கியிருக்க வேண்டும்.