பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

இலங்கையில் ஒரு வாரம்


“அதனால் பாதகமில்லை. இந்த நேரத்தில் இவ்வளவு பேர் வந்து கூடியதே பெரிய காரியம். மேலும் இவர் களைச் சோதிக்கக்கூடாது!” என்றார்.

“இந்த நேரத்தில் இந்த ஊர்க்காரர்கள் சாதாரணமாக என்ன செய்வது வழக்கம்” என்று கேட்டேன்.

“மத்தியான உணவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயருவார்கள்!” என்றார்.

“அப்படியானால், இங்கேயே கண்ணயரட்டும்! நாங்கள் பேசியே தீருவோம்!” என்று சொல்லிவிட்டு, ஸ்ரீ தூரனும் நானும் ஒரு மணி நேரத்துக்கு மேலே வெளுத்துக்கட்டினோம். பருத்தித்துறை வாசிகளின் உச்சிப்பகல் உறக்கத்தை அன்று குட்டிச்சுவராக்கிவிட்டோம்!

மறுநாள் மாலை யாழ்ப்பாணத்தில் நாங்கள் விமானமேறியபோது திரு ஏரம்பமூர்த்தியும் அவருடைய நண்பர்களும் வந்திருந்தார்கள். திரு ஏரம்பமூர்த்தி என்னிடம் அந்தரங்கமாக “ஊருக்குப் போன பிறகு தங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

“அவசியம் கவனித்துக்கொள்ளுகிறேன். ஆனால் மறுமுறை இலங்கை வரும்போது பருத்தித்துறைக்கு வந்து பேசட்டுமா, வேண்டாமா? இப்பொழுதே சொல்லிவிடுங்கள்” என்று கேட்டேன்.

“பேசுங்கள்; பேசுங்கள்! விரிவான சொற்பொழிவும் ஆற்றுங்கள்!” என்று திரு ஏரம்பமூர்த்தி அலறினார்.

இப்படிச் சொன்னால் நான் பேசாமலிருப்பேன் என்று அவருக்கு எண்ணம் போலிருக்கிறது! பார்க்கலாம் ஒருகை!