பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

13


துடைத்தனர், மணிமீது கிடந்த மாசுதுடைக்கப்பட்டது; ஒளி வெளிவரத் தொடங்கிவிட்டது, பட்டம் ஏன்? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்? கடல் கடந்தவன் தமிழன்! இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம் நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறு நடையுடையான் தமிழன்! இன்னல்கண்டும் புன்னகை புரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும் கண்ணாடியும் விற்கவந்து, பின்னர் அரசாள ஆரம்பித்த துரைமார்கள் தருவதா? ஏன்? அந்நாள்தொட்டு, ஆரியன் நமக்கு இட்ட "சூத்திரன்" என்ற இழிபட்டம் போக்கச் சிறுவிரலை அசைக்காதவருக்கு, 'இராவ்பகதூர்' எதற்கு? இந்தப் பட்டமும் பதவியும், தமது காலிலே தட்டுப்பட்டால் மட்டுமே, எடுத்துக்கொள்ளும் பண்பினர் பலர் உண்டு! ஒருசிலர் உண்டு, பகலிலே அதுபற்றியே பேச்சு, இரவிலே கனவு, எந்தநேரமும் அந்தச் சிந்தனையே! அவர்களின் தொகை மிகக்குறைவு! பிரிட்டனின் பாரதிதாசன் எனத்தகும் ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கூறினதுபோல, "அவர்கள் சிறுதொகை, நாம் மிகப்பலர்" மிகப்பலர் கூடி, அவர்களை "ஒன்று உமது இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள், அது இயலாது எனின், எமக்குத் தனிவாழ்வு நடாத்த வழிசெய்துவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர். பட்டம் பதவிகளை விட்டுவிடுவது என்ற தீர்மானத்தின் கருத்து அதுதான்! தளபதி பாண்டியன் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்ததுடன், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைவதற்கு முக்கியமாகக் கட்சியிலே ஒழுங்கான அமைப்பு வேலை இருக்கவேண்டும் என்று கூறினார்கள். 'ஆம்! செய்வோம்!' என்று கூறினர் அன்பர்கள்.

தமிழகத்தைப்பொறுத்த வரையிலே, தளபதிகள் இசைந்துவிட்டனர், இந்த ஆக்கவேலைக்கு. இதற்கான ஊக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உணர்ச்சியுள்ள தோழர்களுடையது. இதைக் காரியத்திலே காட்டும் "சக்தி" வாலிபர்களிடம் இருக்-