பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இலட்சிய வரலாறு


திப்பட முடியாது என்பதைத் திட்டமாகத் தெரிவிக்கவும், திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகிறது. இந்தச் சமயத்தில் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்ற நமது இலட்சியம் வளர்ந்த விதத்தைக் கவனப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

உரிமை முழக்கத்தில் உயிர் துறந்த வீரன்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, இங்கு, திராவிடர் என்ற உரிமை முழக்கம் கிளம்பிற்று. ஆனால், அந்த முழக்கம் மாளிகைவாசிகளின் தொடர்பினால் கெட்டுவிட்டது. இந்த நாடு திராவிட நாடு-இங்குள்ள நாம் திராவிடர்-என்ற முழக்கத்தை மக்கள் மன்றத்திலே, தமது கடைசி மூச்சு இருக்கும் வரை செய்து வந்தவர் டாக்டர் சி. நடேச முதலியார். அவர் துவக்கிய அந்த அரிய இயக்கத்தினால் உண்டான வேகத்தை, உண்மையான விடுதலைக்குப் பயன் படுத்திக்கொள்ளாமல். அரண்மனைகளிலே வீற்றுக்கொண்டு அரசியலை நடத்தி வந்த சீமான்கள், பட்டம் பதவிகளுக்கு இந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டதுடன், தங்களுடைய முழுத் திறமையும், காங்கிரசைக் குறை கூறவும், அதே நேரத்தில் பிரிட்டிஷாருக்குத் துதி பாடவுமே உபயோகப்பட வேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர். எனவே, திராவிடர் என்ற உரிமைச் சொல், திராவிட அரசு அமைக்கும் பரணியாகாமல், சர்க்கார் காரியாலயக் கதவைத் தட்டும் சுயநலச் சத்தமாகி விட்டது. டாக்டர் நடேச முதலியார், உள்ளம் உடைந்தே மாண்டார்; இருந்த வரையில் அவர் திராவிடன் என்று பேசத் தவறியதில்லை.

ஆரியத்தை அகற்ற ஆர்வம் காட்டாத தலைவர்கள்

அந்த நாட்களிலே, ஆங்கிலத்திலே, S. I. L. F. என்றும், ஜஸ்டிஸ் என்றும் மாளிகைகளில் வழங்கி வந்ததேயொழிய, மக்களின் முன்பு, திராவிடன் என்ற பெயரே வழங்கப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையின் பெயரே ' திராவிடன்' திராவிடக்