பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

39


விளக்குவது போல ! வானத்திலே இங்கு மங்கும் மேகங்கள், தமிழ்ச் சமுதாயத்திலே உள்ள கரைகள் போல ! தமிழன் மீண்டும் தன் இலட்சியத்தைப் பெற்றுவிட்டான். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டான். மங்கியிருந்த இலட்சியம், மீண்டும் உலவலாயிற்று ! இம்முறை நேரடியாக, மன்றத்துக்கு இலட்சியம் போய்ச் சேர்ந்தது ! ஆகவே அந்த இலட்சியத்துக்கு, புதியதோர் சக்தி ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு, தாங்கள் ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மாளிகைக்கு அல்ல, பதவிக்கு அல்ல; நம் நாட்டின் தனி உரிமைக்குப் போராடப் போகிறோம் என்று எண்ணலாயினர்! அந்த எண்ணம், புரட்சிக் கவிஞரின் பொன்மொழிகளினால், மேலும் உரம் பெற்றது.

ஆடுவமே பள்ளுப் பாடுவமே
தமிழ்ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

என்றார் கவிஞர் ! ஆயிரமாயிரம் இளைஞர்களின் விழிகளிலே களிப்பு கூத்தாடலாயிற்று. தேர்தல், சட்டசபை, மந்திரி சபை முதலியன, அவர்களின் பார்வைக்கு மிக மிகச் சாமான்யப் பொருள்களாயின. அந்தப் பொருள்களுக்காக ஆவல் கொண்டிருப்பவர்கள், இளைஞர்களின் கண்களிலே, சேலத்தில் கேலிச் சித்திரங்களாகத் தெரியலாயினர். தடைகளை, சங்கடங்களை மீறி, இளைஞர்கள், அந்த இலட்சியத்தை நோக்கி நடக்கலாயினர், புதிய பாதை கிடைத்து விட்டது என்ற பூரிப்புடன் தமிழன், தன் மொழி, கலை, இவைகளைக் காப்பாற்ற நாட்டை மீட்டாகவேண்டும் என்பதைக் கண்டறிந்து, கூறிய போர் முழக்கம், தமிழ்நாடு தமிழருக்கே என்பது !

ஏளனம் பேசியோர் " எரிமலை" கண்டனர்

எலிவளை எலிகளுக்கே என்றனர், ஏளனம் பேசியே எதையும் ஒழித்துவிடமுடியும் என்று எண்ணிய அறிவாளிகள்! மக்களோ தமிழ் நாடு தமிழருக்கே என்பதை உச்சரிக்கலாயினர்.