பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

45



புதிய கட்சிகள் வேண்டும்

"சுதந்திரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன. எங்கு ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கு ஜன நாயகத்திற்கு உறைவிடம் சவக்குழி தான். இது ஒரு மகத்தான சோதனையாயிருக்கும். ஏனெனில், நாம் நடத்தி வந்துள்ள ஒரு நீண்ட கடுமையான போராட்டத்தின் போக்கில் நாம் காங்கிரசைத் தவிர மற்றச் சகல கட்சிகளிடத்தும் அவநம்பிக்கை கொள்ளக் கற்று வந்திருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் ஒன்றினிடத்தில் மட்டும் நாம் கொண்ட பக்திக்குக் காரணம், காங்கிரஸ் இன்று வரை ஒரு கட்சியாக இராமல் ஒரு இயக்கமாக இருந்து வந்ததுதான் என்பதை நாம் உணர வேண்டும். அது ஒரு பொதுஜன முன்னணியாக விளங்கிற்று; அதன் ஆதரவில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றுபட்டு அந்நிய அதிகாரத்திற்கெதிராக ஒரு பொது இலட்சியத்தை உருவாக்கின. அந்த இயக்கம், இந்தியாவை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் தனது பணியை இப்போது நிறைவேற்றி வைத்து விட்டது.

சுதந்திரமெய்திருக்கும் இத்தருணத்தில் காங்கிரஸ் ஒரு கட்சியாக மாறிவிடுகிறது. இயக்கம் என்ற அதன் உருவம் மறைந்து விடுகிறது. அந்த நிலைமையானது பல்வேறு அரசியல் பொருளாதாரத் திட்டங்களையுடைய மற்றக் கட்சிகள் ஸ்தாபிக்கப் படவேண்டியதை அவசியமாக்குகிறது.

இந்தப் புதிய கட்சிகளில் சில, காங்கிரசிற்கு உள்ளிருந்தே எழும் அந்தக் கட்சிகள், காங்கிரசிற்கு ஒருபோதும் தங்களின் தளராத விசுவாசத்தை அளித்திராத நபர்களையும் சேர்த்துக் கொள்ளும் காங்கிரஸ் வலதுசாரியாகவும், இடதுசாரியாகவும் பிரிந்துவிடுமென்று தோன்றுகிறது. எனினும் அதுவும் கொஞ்சகாலம் வரை ஒரு இடைக் கட்சியாக ஆதிக்கம் வகித்துவரும்.