பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சு. சமுத்திரம் + 9


பாமா... எஞ்ஜினியர் ஜெயராஜோட சிஸ்டர்..." என்றாள். மணிமேகலை அவளைப் பார்க்காமலும், வெளியே விட்டிருந்த கண்களை எடுக்காமலும் "கொஞ்ச நேரம் சும்மா இரு" என்றபோது, வாயைச் சும்மா வைத்திருக்காத பாமா “ஊருக்கு வந்ததுல என்னை மறந்திட்டிங்களோன்னு ஞாபகப்படுத்துனேன்" என்று சொன்னாள். உடனே மணிமேகலை, தன் கண்களைக் கட்டாயப்படுத்தி, அவளைப் பார்க்க வைத்துக்கொண்டு 'அவனைக் காணுமே...' என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஜன்னலுக்கு வெளியே தலையை விட்டாள். பாமாவால் சும்மா இருக்க முடியவில்லை, ஜன்னலுக்குள் தலையை விட இடமும் இல்லை.

  "நான் வெளில போய் அவரைப் பார்க்கேன்.”
  "நீ அவனை முன்ன பின்ன பார்த்தது கிடையாதே?”
  "அதுக்கென்ன... உங்க ஊரு ஆட்கள்தான் தனியாத் தெரியுமே!"
  பாமா, ரயில் பெட்டியின் வாசலுக்கருகே வந்து, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வருவோர் போவோரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, ஒரளவு கறுப்பான கவர்ச்சியுடனும், கிருதா முடியுடனும் ஒவ்வொரு பெட்டியையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டுவந்த ஒரு வாலிபனைப் பார்த்து, "நீங்கதானே மிஸ்டர், சந்திரன்?" என்றாள். அவளை, 'எக்ஸ்ரே' கண்களுடன் பார்த்த அவன், பல பத்திரிகைகளைப் படிக்கும் அவன், அவள் பேச்சு நாகரிகமான மோசடிக்கு முதலீடாக இருக்கும் என்று நினைத்தவன்போல், தன் சட்டைப் பையைப் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டே “நீங்க யாரு" என்றான். அதட்டலுடனும், அதே சமயம் அந்த அதட்டல் அவளுக்கு தெரியக்கூடாது என்ற ஆதங்கத் துடனும், பாமா, அவனை மேற்கொண்டும் அடையாளப்