பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 111


ஜெயராஜ் குழந்தைக்குப் பதிலாக ஒரு பொட்டலத்தை நீட்டினான். அவளுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தவன்போல் பின்னர் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான்.

கையுறைகள்!

ஜெயராஜ் விளக்கினான்.

“இனிமேல் இதைப் போட்டுக்க ஒனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. சாப்பிடும்போது ஸ்பூனை வைத்து சாப்பிடு. குழந்தைக்கு முத்தம் கொடுக்காதே!”

மணிமேகலை போகுமுன்னாலேயே ஜெயராஜ் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு போய்விட்டான். நெற்றியைச் சுருக்கி கண்களை இழுத்துப் பிடித்துக் கொண்டே தன் அறைக்கு வந்த மணிமேகலை, தலையில் கை வைத்துக்கொண்டே தூங்காமலும், சுய உணர்வு இல்லாமலும் மூலையில் தன் மேனியைச் சாத்தினாள்.

நள்ளிரவில் பையன் அழுதான். வீல் வீலென்று கத்தினான். அந்த அழுகையில் சந்தோஷப்பட்டவள் தாய், பிள்ளையைக் கொடுத்திடுவாரு... கொடுத்திடுவாரு...

மணிமேகலை வீட்டின் முன்பக்கம் வந்தாள். வீட்டிற்குள் விளக்கு போடப்பட்டிருந்தது. வசந்தி குழந்தையை எடுத்து உடம்பைக் குலுக்கி, குழந்தையை குலுக்குகிறாள். குழந்தை இப்போது குலுங்கி அழுகிறது.

“அம்மா...ம்மா.அம்மா.கிட்ட அம்மா கிட்ட.”

திடீரென்று விளக்கு அணைகிறது. மணிமேகலை அனைந்த உள்ளத்துடன் தன் வசிப்பிடம் வருகிறாள். வாழ்விடத்தில் வசந்தி இருப்பதை எண்ணி எண்ணி தன் வசிப்பிடத்திலேயே அழுகிறாள். ஊமை அழுகை அது. ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வராமல், ரத்தத்தை சுண்டி-