பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26 + இல்லம்தோறும் இதயங்கள்



    "எப்படி?”
    "செயற்கையாச் சிரிக்கும்போது, ஒங்க புருவம் உயரும். உதடு குவியும். கன்னம் உப்பும். இயற்கையா சிரிக்கையில, புருவம் வளையும். பல்லெல்லாம் சிப்பிக்குள்ள இருக்கிற முத்துமாதிரி ஜொலிக்கும். அதுசரி, ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க? எங்க அண்ணிக்கு ஒண்ணுன்னால், எனக்கு ரெண்டாக்கும்..."
    "ஒண்ணுமில்ல.... ஒங்க அண்ணாவ நினைச்சேன். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இதுதான் எங்களோட முதல் பிரிவு. இப்படி ஒரு வாரம் வரைக்கும் பிரிஞ்சதில்ல. பாவம் என்ன பண்ணுறாரோ?”
    "அண்ணன் குழந்தையில்ல அண்ணி."
    "ஒனக்குத் தெரியாது. சாயங்காலம் பேக்டரியில் இருந்து வீட்டுக்கு வரும்போது டயர்டாய் வருவாரு. உடம்பு வலிக்குது, தலை சுத்துதுன்னு சொல்லுவார். நான் பயந்துபோய் பிளட் பிரஷ்ஷரா இருக்குமோ? சர்க்கரை வந்திருக்குமோன்னு நினைப்பேன். கடைசில பார்த்தால் மத்தியானம் சாப்பிட மறந்திருப்பார். ஓ மை காட்... லஞ்ச் சாப்பிடல'ன்னு சின்னப்பிள்ளை மாதிரி சிரிப்பாரு, இப்போ.. என்ன பண்ணுறாரோ? ஒன்கிட்ட சொல்ல வெட்கமா இருக்கு... யாருகிட்டயும் சொல்லமாட்டீயே?”
    "சும்மா சொல்லுங்க அண்ணி.”
    "இப்படித்தான் ஒரு நாளு."
    பாமா, மைனாக்குருவி மாதிரி கழுத்தை நீட்டி, 'இப்படித்தான்', 'எப்படித்தான்' ஆகிறது என்பதைப் பார்க்க முடியாவிட்டாலும், கேட்கலாம் என்ற நப்பாசையுடன் நடந்தபோது, எதிர்ப்பக்கமாக நடந்துவந்த வாலிபன்