பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 47


துடிக்கும் ஓணானோட சுதந்திரம். அந்த ஓணானிடம் பிடிபட்டு விடக்கூடாதேன்னு நினைக்கிற பல்லியோட சுதந்திரம். அதன் வாயில் விழப்போகும் கரப்பான் பூச்சியோட சுதந்திரம் ! இதுக்குக் காரணமே இந்த படிச்சவங்கதான். படிப்பு ‘நாலேஜாகாது’ என்பதை உணராமல், ‘நாலேஜ் இஸ் பவர்’ என்பதை உணராமல், வெறுமனே அதிகார ஆடம்பரத்திற்காக, ஒவ்வொருவனும் தன்னைச் சுற்றியே ஒரு வலையை பின்னிக்கிட்டான். மொத்தத்துல, பாரதப் பெருங்குடியினரான படிச்ச வங்களுக்கு, ஒரு தேசிய கேரெக்டர் கிடையாது. இந்த சூழ்நிலையில, ஊர்ல. கெளரவம் வரணுமுன்னு, நான் ஆபீஸ்ல அகெளரவப்படத் தயாராய் இல்ல.”

வெங்கடேசன் பேச்சை முடித்துவிட்டு, அவளையே பார்த்தான். அவளும் “காலேஜ் ஞாபகம் வருது அத்தான். சரி நான் வரட்டுமா? ஊருக்குப் போறேன். சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன். ரயிலுக்கு நேரமாவுது. வரட்டுமா ?” என்றாள்.

வெங்கடேசன், தலையை வலுக்கட்டாயமாக ஆட்டியபோது, மணிமேகலை, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும், அந்த வீட்டைத் தாண்டியதும் நிதானமாகவும் நடந்து வீட்டுக்கு வந்தாள். லேசான உள்ளம், இப்போது லேசாகக் கனத்தது.

வீட்டு முன்னால், ‘டாக்ஸி’ நின்றது. பாமாவும், சந்திரனும் மாம்பழக் கூடையையும், பலாப்பழக் கூடையையும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கனகம், இன்னும் முடங்கிக் கிடந்தாள். அப்பா, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, எதையோ வெறித்துப் பார்த்தார். எங்கேயோ போய்விட்டு வந்த அண்ணன், சந்திரனைப் பார்த்து “ஏண்டா, அனாவசிய செலவு எதுக்குடா ? டிராக்டர்லயே போகலாமே?” என்றபோது, கிழவர்,