பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம் ★7

கொண்டு, தம்பி வருகிறானா என்று கண்களை சுழல விட்டும், படரவிட்டும், சிதறவிட்டும், உடம்பை நெளிக்காமலும், முகத்தைச் சுளிக்காமலும் தேடிக்கொண்டிருந்தாள். தம்பியைக் காணவில்லை. தெரிந்தவர் ஒருவர், அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார், உள்ளுர்க்காரர்.

“மாமா. ஒங்களத்தான் மாமா...”

“அடடே... மணிமேகலையா? எப்பம்மா வந்த?”

“அப்பாவுக்கு எப்படி மாமா இருக்கு?”

“அதை ஏன் கேக்குற? சாப்பாடு இறங்க மாட்டக்கு. மூணு மாசமா படுத்த படுக்கை... பெரிய வாதை. பிராணனும் போக மாட்டக்கு.”

“மாமா, நீங்க என்ன சொல்றீங்க?”

“பெத்த மகள்மாதிரி உன்கிட்ட சொல்லுதேன். அப்பா செத்தாக்கூட தேவலன்னு எனக்கு நெனப்பு வருது. என் வீட்டுக்காரியா... அவர படாதபாடு படுத்துறாள். அவருக்கும் ஒத்துப் போகத் தெரியல.”

மணிமேகலை புரிந்துகொண்டாள். அவர், அவரது அப்பாவைப் பற்றி பேசுகிறார். அவரவர் அப்பா, அவரவருக்கு உசத்திதானே! நயமான நாகரிகத்தைக் கருதியும், இயல்பான தாய்மையாலும், மணிமேகலை, அவரிடம் மேற்கொண்டு பேசினாள்.

“தாத்தாவை நல்லா கவனியுங்க மாமா. நாம குழந்தையா இருக்கையில, எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பாங்க? குழந்தைங்க, பெரியவங்களா ஆகும்போது, பெரியவங்க குழந்தையா மாறிடறதும், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடிக்கதும் இயற்கை. அவங்க நம்மகிட்ட எப்படி ஒத்துப் போனாங்களோ, அதுமாதிரி நாம இப்போ அவங்ககிட்ட ஒத்துப் போகணும்.”