250
இளங்குமரனார் தமிழ்வளம் – 1
போல வழங்குவது ஆலங்கட்டி. அதனைக் கல்மழை என்பது மதுரை வழக்காகும்.
கல்லக்காரம்:
அக்காரம் இனிப்பு: அக்கார அடிசில் என்பது கற்கண்டுச் சோறு. கல்லக்காரம் எனப் பனங்கற்கண்டை வழங்குதல் யாழ்ப்பாண வழக்காகும்.
கல்லுமுறி:
இது
கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும். திருப்பரங்குன்ற வட்டாரவழக்கு. முறி என்பது எழுத்து ஓலை. கல்லே எழுத்து முறியாகக் கொள்ளப்பட்ட கல்வெட்டை நோக்கலாம். முறியில் எழுதப்பட்டதே கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட பழவரலாற்றுச் சான்றும் ஆகலாம்.
கலவடை:
கலங்கள் ஏனங்கள் வைப்பதற்குக் கட்டும் மேடையைக் கலவடை என்பது கட்டடத் தொழிலாளர் வழக்கு. சுமை அடை என்பது போன்றது, கல அடை.
கலவன்:
பயிர் நெருக்கமாக இல்லாமல் இடைவெளி மிகுதியாக இருப்பதைப் பயிர் கலவனாக இருக்கிறது என்பது உழவுத் தொழில் வழக்காகும். நெருக்கமாகப் பயிர் இருந்தால் பயிர் கலப்புக்காகப் பறிப்பது வழக்கம். அதற்குக் கலைப்பு (கலப்பு) என்பது பெயர்.
கலவித்து விட்டு:
சண்டை போட்டு விட்டுப் போவதைக் கலவித்து விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது கிள்ளியூர் வட்டார வழக்கு. கலகம் செய்தல் என்பது சண்டை போடுதலைக் குறிக்கும் பொது வழக்கு. கலகம் செய்து என்பது கலவித்து என ஆயது. கலகம் கலவு’ ஆயது இது.
கலுசம்:
கால் சட்டை என்பதைக் ‘கலுசம்' என வழங்குதல் விளவங் கோடு வட்டார வழக்காகும். 'கால் சராய்' என்பது தென்னகப் பொது வழக்காகும். இன்னும் ‘அரைக்கால் சட்டை’ என்பதும் மக்கள் வழக்கே.