வட்டார வழக்குச் சொல் அகராதி
377
உள்ளே புகாமல் கெட்டிப்பட்ட மேட்டு நிலம் பொட்டல் எனப்படும். பயிரீட்டுக்குப் பயன் செய்யாது. அந்நிலம் நீர் உட்கொள்ளாமை போல, இவன், உட் கொள்ளாதவன் என்னும் பொருளில் பொட்டன் எனப்பட்டானாம்.
பொட்டித்தல்:
பொட்டித்தல் என்பது திறத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பொட்டுப் பொட் டெனக் கண்ணை இமைத்தல்; பொட்டென்று கண்ணை மூடப் பொழுது இல்லாமல் தவிக்கிறேன் என்னும் தொடர் களை நோக்கினால் மூடித் திறத்தல் என்பதற்கும் பொட்டு தலுக்கும் உள்ள தொடர்பு புலப்படும். பொட்டென்று போய் விட்டார் என்பதும் கண்ணை மூடுதலை (இறத்தலை)க் குறிப்பதே.
பொட்டு:
பூக்களின் இதழ்கள், பொட்டு என வழங்கப்படும். அப் பொட்டுகளைப் போலச் செய்யப்பட்ட அணிகலங்களுள் ஒன்று தாலி. அதற்குப் 'பொட்டு' என்று வழங்குவது குமரி மாவட்ட வழக்காகும். பொட்டுத் தாலி என்று இணைத்துச் சொல்வதும் வழக்கே. 'தோடு' என்னும் அணிகலப் பெயரும் 'பொட்டு’ என்னும் இயற்கை வழிப்பெயராதல் கருதுக.
பொடித் தூவல்:
பொரியல் எனப்படும் பொது வழக்கு, திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் பொடித் தூவல் எனப்படுகின்றது. அவியல், துவையல் போன்றது அல்லாமல் பொரியல் கறி செய்து முடித்து, பின்னர் அதன்மேல் அதற்கு வேண்டும் உப்பு, உறைப்பு, மசாலை (உசிலை) ஆயவற்றைத் தூவும் செய்முறையால் பெற்ற பெயராகும் இது.
பொதும இலை:
வாழைக்காய்
முதலியவற்றைப்
பழுக்க வைப்பவர்
வைக்கோலால் மூடல், புகை போடல் ஆகியவை செய்வர். வேப்பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில் வேப்பிலையைப் 'பொதும இலை' என வழங்குகின்றனர். மூடி வைத்தல் என்பது பொதிதல் என்பதாம். ‘பொதி' என்பது பொதிந்து வைக்கப் பட்ட மூடையாகும். பொதி என்பது பழங்கால நிறைப் பெயர்களுள் ஒன்று.