பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

25

போது அதனைக் கேட்பவர் வாயால் உச்சிட்டுக் கொண்டு கேட்பது வழக்கம். அவ்வாறு கேட்பதை உச்சுக் கொட்டல் என்பர்.

உச்சுக் கொட்டுதல் என்பது ஏற்றுக் கொள்ளுதல். ஒப்புக் கொள்ளுதல், வருத்தம் தெரிவித்தல் முதலிய பொருள்களைத் தருவதாய் வழக்கில் உள்ளது. “உச்சு உச்சு என்று சொல்லும் போது கேட்டு விட்டு இப்பொழுது சொல்வதைப் பாரேன்; செய்வதைப் பாரேன்” என்று மாறுபட நடக்கும்போது இடித்துக் காட்டுவதும் வழக்கே. ‘ஊம்’ போடல் காண்க.

உசுப்பல் - எழுப்பல், ஏவிவிடல்

நாயை 'ஊச் ஊச்’ எனக் கூப்பிடல் உண்டு. உச்சுக் காட்டல், உச்சுக் காட்டல் - அழைத்தல்; அது படுத்திருந்தால் எழுப்புதலும், ஒன்றன்மேல் ஏவுதலும் உச்சுக்காட்டல் என்று வழங்கும். அவ்வழக்கத்தில் இருந்து உறங்குபவரை எழுப்புதல் ‘உசுப்பல்' என ஆயிற்று. “எப்படி உசுப்பியும் எழும்பவில்லை' என்பது கும்பகன்ன உறக்கத்தாரை எழுப்புவார் குறை. உசும்பல் எழும்புதல். அணிலைப் பிடிக்க நாயை உசுக்காட்டுவார் மிகப் பலர். வேட்டை வேலை உசுக்காட்டல் தானே!

உடைப்பில் போடல் - தள்ளிவிடல்

-

உடைப்பை அடைக்க மண்ணையும் கல்லையும் போடுவர். சிலர் எரிச்சலால் உதவாக் கரைப்பிள்ளைகளையும் வேலைக் காரரையும் உன்னை உடைப்பில் வைக்கலாம்; உடைப்பில்தான் போட வேண்டும் என்பர். சில வேலைகளைச் செய்யாது தவிர்த் தலைக் கிடப்பில் போடல் என்பதுடன் உடைப்பில் போடல் என்பதும் உண்டு. முன்னது பள்ளத்தில் தள்ளல் பின்னது காலத்தைத் தள்ளல். உடைப்பில் போட்டு மூடப்பட்டது வெளிப்படுமா? புதைபொருள் ஆய்வார்க்கு ஒரு காலத்துப் புலப்படலாம். உதவாக்கரை - பயனற்றவன்

நீரை நெறிப்படுத்தி நிறுத்துவதற்கும் ஓடச் செய்வதற்கும் பயன்படுவது கரை. அக்கரை உதவும் கரையாகும். அச்செயலைச் செய்யப் பயன்படாத கரைகளும் உண்டு. அவை நீர் வந்தவுடனே கசிந்தும் கரைந்தும் உடைப்பெடுத்தும் போய்விடும். அவை உதவாக்கரை. அப்படியே குடும்பத்துக்கு உதவும் மகன். உதவும் கரைபோன்று நலம் செய்வான். உதவாத உதவாத மகன், உதவாக் கரையாக இருந்து, இருப்பதையெல்லாம் கெடுத்தொழிவான். உதவாத கரைபோல்வானை உதவாக் கரை என்பது வழக்கு.