பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

45

வதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச் சொன்னதாகவும் இட்டுக்கட்டிக் கூறுபவரைக் கதை விடுகிறார்' என்றும், ‘கதைவிடுதலில் பெரிய ஆள்' என்றும் கூறுவதுண்டு.

கயிறு திரித்தல், சரடுவிடல் என்பனவும் கதை விடல் போல்வனவே.

கமுக்கம் - வெளிப்படுத்தாமை

தோளின் உள் வாய்க் குடைவுப் பகுதி வெளிப்படாமல் மூடப்பட்டு இருப்பது. கையின் மறைவுக்கு உள்ளடங்கி இருக்கும் அப்பகுதி கமுக்கம் என்றும், கமுக்கக்கூடு (கம்புக்கூடு) என்றும் வழங்கப்படும். அது மறைவாக இருப்பதுபோல வெளிப்படாது மறைக்கப்படும் செய்தி அல்லது மறக்கப்படவேண்டிய செய்தி ‘கமுக்கம்’ எனப்படும். 'இரகசியம்’ என்னும் வேற்றுச்சொல் லாட்சி பெரிதும் வழக்கில் ஊன்றியமையால் ‘கமுக்கம்” எனும் தமிழ்ச் சொல் வழக்கில் அருகியது. பாவாணர் அதனைப் பெரிதும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி நமக்குள் கமுக்கமாக இருக்கட்டும் என்பது வழக்கு.

கயிறு உருட்டல் - புனைந்துரைத்தல்

பஞ்சு, நூல், நார் முதலிய மூலப் பொருள் கொண்டு நொய்தாகவும் தும்பு துகளாகவும் இருக்கும். அவற்றால் - வலிய கயிறு உருட்டுதல் வழக்கு. பல நுண்ணிழைகள் கூடுதலால் வலிய கயிறு உண்டாக்கப்படுதல் போல் ஆங்கும் ஈங்கும் கண்டு கேட் சில சிறிய செய்திகளைத் திரட்டி மனம் போலச் சேர்க்க வேண்டு வன சேர்த்து ஒன்றாக்கிப் பலரும் அறிய உருட்டி விடுவதைக் கயிறு உருட்டல் என்பது வழக்கம். தாமரைத் தண்டின் நூலே பல்லாயிரம் சேருங்கால் பருங்கயிறாகி யானையையும் கட்டிவிடும் என்பர். கயிறு உருட்டுபவரால் வலிமையானவரும் ஒரு கால் வீழ்ச்சியுறல் காணக் கூடியதே. சரடு விடுதல், கதைவிடல் காண்க. கயிறு கட்டல் - திருமணம்

தாலி கட்டல், மஞ்சள் கயிறு கட்டல், முடிச்சுப் போடல் மூன்று முடிச்சுப் போடல் என்பனவெல்லாம் இதுவே.

மங்கலம், தாலி என்பவற்றைத் திருப்பூட்டெனப் பூட்டி னாலும் அதனைக் கயிற்றில் நுழைத்துக் கழுத்தில் கட்டுவதே வழக்கம். வெறுங்கயிற்றை மஞ்சள் துண்டு கட்டிப் போடுவதும்