பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

கால் வைத்த நேரம் என்பது குடிபுகுந்த நேரம் என்பதையும் குறிக்கும். "அவள் கால் வைத்த நேரம் நல்ல நேரம். செல்வம் கொழிக்கிறது” “அவள் கால் வைத்த நேரம் இப்படித் தொட்ட தெல்லாம் கரியாகிறது” என்பது போன்றவற்றில் கால் வைத்தல் என்பது குடி புகுதல் என்னும் பொருளைக் காட்டுவது.

காலி - ஊர்சுற்றி, போக்கடிப்பு

பொழுதை வீணடித்து ஊர்சுற்றித் திரிபவன் காலி. அவ னினும் மிகக் காலி, 'படு காலி எனப்படுவான்.

கால்நடை ‘காலி' எனப்படும், ஊர் ஆடு மாடுகள், ஊர்க் காலி என வழக்குறும். மாந்தரெல்லாம் காலால் நடப்பவரே எனினும் வெட்டித்தனமாகச் சுற்றுபவரே காலியாகச் சொல்லப் படுவராம். காலித்தனம், காலிப்பயல் என்பவை பொழுதை வீணாக்குவதுடன் பொருளையும் வீணாக்குபவனைக் குறிப்ப தாகலாம். காலியாதல் போக்கடிப்பாக உள்ளதும் அறியத் தக்கதே. மேல் வீடு (மூளை) காலி; வாடகைக்கு விடப்படும் என்பது எள்ளற் பழமொழி.

காலைக்கட்டுதல் - கவலைப்படுதல்

காலைக் கட்டுதல். அயலார் கட்டுதல் அன்று. தானே தன் காலைக் கட்டுதல் ஆகும்? கப்பல் கவிழ்ந்தாலும் காலைக் கட்ட லாமா? கன்னத்தில் கை வைக்கலாமா? என்பவை பழமொழிகள்.

கவலைப்பட்டோர் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கால் முட்டிகளுக்கு ஊடே தலையை வைத்துக் கைகளால் காலைக் கட்டிக்கொண்டு இருத்தலே காலைக் கட்டுதல் எனப்படுகிறது. கவலைக்குரிய தன்மை வெளிப்பாடு காலைக் கட்டுதல் ஆகும். தாயைப் பிரியமாட்டாத சேய் தாயின் காலைக்கட்டுதல் கவலை யோடு கூடிய அன்பு வெளிப்பாடாம். அக்கால் தன் கால் அன்றாம்.

காலைச் சுற்றல் - நெருக்கி வளைத்தல்

கொடி காலைச் சுற்றும்; வைக்கோற் புரி, கயிறு ஆகியவை யும் காலைச் சுற்றும். சில வகைப் பாம்புகளும் தீண்டிவிட்டு ஓடாமல் காலைச் சுற்றிக்கொள்ளுதல் உண்டு. “காலைச் சுற்றி யது கடியாமல் விடாது” என்பது பழமொழி.

காலைச் சுற்றுதல் என்பது நெருங்கி வருதலையும், சுற்றி வளைத்தலையும் குறிப்பதாக விரிவடைந்தது. சிலர்க்கு இரக்கத் தால் உதவினால் அவ்வுதவியளவில் நில்லாமல் மேலும் மேலும்