பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் 1

கொசுவிரட்டல் - வணிகம் படுத்து விடுதல்

ஈ விரட்டுதல் போன்றது இக்கொசு விரட்டுதலும். வெருட்டுதல் - அஞ்சி ஓடச் செய்தல். அது விரட்டுதலாக வழக்கில் உள்ளது. வணிகம் சிறப்பாக நடந்தால் வேலையாள், வாங்குவார், போவார் வருவார் எனப் பலர் இருப்பர். அந்நிலை இல்லாத போது கடைக்காரர் கை ஈயையும் கொசுவையும் ஓட்டுமே அன்றி, அளக்க, நிறுக்க வேண்டியிராதே.

கொம்பு சீவல் - சினமுண்டாக்கி விடுதல்

மாடுகளின் கொம்புகளைச் சீவுதல் வழக்கம் ‘அதிலும் முட்டும் மாடுகளின் கொம்பைச் சீவி அதன்மீது குப்பிமாட்டி, அக்குப்பியில் சதங்கையும் போட்டிருப்பர்’ மாடு வருகிறது, தலையசைக்கிறது என்பவை அறியாமல் நெருங்கிச் செல்ல நேர்பவர்க்கும் அறிவுறுத்தித் தீமையில் இருந்து அதுவிலக்கும். ஆனால் அம்மாட்டின் கொம்பைச் சீவிவிட்ட அளவில் நின்று விட்டால், என்ன நிகழும்? மழுக்கைக் கொம்பிலும் கூரான கொம்பால் கொடுமையாகக் குத்திக் கொலைப்பழியும் புரியும். அவ்வாறே சிலர், சிலர்க்குச் சில செய்திகளைச் சொல்லிச் சூடேற்றிக் குத்துவெட்டு கொலைப் பழிகளுக்கும் ஆளாக்கி விடுவர். அது கொம்பு சீவி விட்டது போன்றதாம்.

கொழுத்தவன் - பணக்காரன், அடங்காதவன்

கொழுப்பு என்பது கொழுமைப் பொருள்; ஊட்டம் தேங்கியுள்ள பொருள் கொழுப்பு. அக்கொழுப்பைக் குறியாமல், பணப்பெருக்கத்தைக் குறிப்பதாகவும் வழங்கும். அதனை விளக்க மாகக் 'கொழுத்த பணம்' என்றும் 'கொழுத்த பணக்காரன்’ என்றும் கூறுவது உண்டு.

உடல் வலிமை காட்டி அடிதடிகளில் முறைகேடாக ஈடுபடு பவனைக் கொழுத்தவன் என்பதும் வழக்கே. “கொழுப்பு அடங்கி னால்தான் சரிக்கு வருவான்” என்பதால் கொழுப்பு தடிச் செயலுக்கு இடமாக இருத்தல் அறிக. “கொழுத்தவன் எல்லாம் ஒரு நாள் புழுத்து நாறும்போதுதான் உணர்வான்” என்பதன் கொழுப்பு அடாவடித்தனத்தைக் குறிப்பதே.

கொள்ளி முடிவான் - ஓயாது தீமையாக்கு பவன்

கொள்ளி - நெருப்பு; முடிவான் - முடிந்து வைப்பவன், தனக்கு முடிந்து வைப்பவன்.