பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

119

வை மூன்றாம் எழுத்து ஒன்றிவந்தமையால் மூன்றா மெழுத் தொன்று எதுகை யாயின.

நெறிப்படவந்த என்னும் விதப்பால் மோனை எதுகைகளில் பிறவாறு வருவனவும் உண்டாயின் சான்றோர் செய்யுளை நோக்கிக் கொள்க.

எதுகைக்கு மேலும் ஒரு சிறப்புவிதி

34. யரலழ என்னும் ஈரிரண் டொற்றும்

வரன்முறை பிறழ்ந்து வந்திடை உயிர்ப்பினஃ

தாசிடை எதுகையென் றறிந்தனர் கொளலே.

-1யா. வி. 37 மேற்.

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் எதுகையுள் ஆசிடை எதுகையு முண்டென்று காட்டி அதன் இலக்கணம் கூறிற்று.

(இ - ள்.) ய, ர, ல, ழ என்னும் நான்கு புள்ளி எழுத்துக்களும் தாம் எதுகையாக நிற்கும் இடத்தல்லாமல் முறை பிறழ்ந்து மோனை எழுத்திற்கும் எதுகை எழுத்திற்கும் இடையே நிற்பின் அஃது ஆசிடை எதுகை என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்றவாறு.

ஆசிடை எதுகையை மேலே நூற்பாவுடன் இணைக்காமல் தனித்துக் கூறியதற்குக் காரணம் ஆண்டுக் காட்டினாம். மற்றும், மோனை எதுகை இரண்டற்கும் பொதுவாய் அமைந்த இலக்கணம் ஆங்கு இரட்டுறலாகக் கூறப் பெற்றது. ஈண்டுக் கூறியது எதுகை ஒன்றற்குமேயாம். ஆதலால் தனித்துக் கூறவேண்டும் என்பதுவும் ஒன்று.

ஆசு’ என்பது பற்றுக்கோடு. 'ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ' (235) என்னும் புறப்பாடலால் ஆசு இப்பொருட்ட தாதல் அறிக. இவண் பொது விதிக்கு முரணாகப் பற்றிக் கொண்டு வரும் எழுத்தைக் குறித்து நின்றது. இனிப் பொற்கொல்லர் பயன் படுத்தும் பற்றாசு போன்றதோர் எழுத்து என்றுமாம்.

ய, ர, ல, ழ என்னும் எழுத்துக்கள் எதுகையாய் அமைந்த இரண்டாம் எழுத்துக்கள் அல்ல என்பாராய் ‘வரன்முறை பிறழ்ந்து' என்றார். இடை என்றது மோனைக்கும் எதுகைக்கும் 'இடை' என்பது குறித்து நின்றது. அவ்வெழுத்துக்களும் எழுத் தளவாய் நின்று ஒலியாவோ எனின் அற்றன்று ஒலிக்கும் என்பாராய் 'உயிர்ப்பின்' என்றார்.

1. பா. வே. கையகனார்