பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

யாப்பருங்கல விருத்தி யாப்பிலக்கணத்தின் கலைக் களஞ்சியம்; தமிழ் இலக்கணப் பரப்பினைத் தெள்ளிதின் விளக்கிக் காட்டும் கலங்கரை விளக்கம்; உரையாசிரியர் புலமைத் திறனை அளவிட்டுக் காட்டுதற்கு வாய்த்த ஒப்பற்ற உரைகல். இத்தகைய நூலின் பதிப்புப் பணியைக் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையா பிள்ளை அவர்கள் தமியேனிடம் ஒப்படைத்த ஒன்றே இன்று, 'காக்கைபாடினியம்’ உரை விளக்கம் பெற்றுத் தமிழ் கூறும் உலகத்தில் உலாக் கொள்ள வாய்ப்பாயிற்று.

96 நூற்பாக்களைக் கொண்ட யாப்பருங் கலத்திற்கு அதன் விருத்தியுரையார் தொல்காப்பியம், அவிநயம், காக்கை பாடினியம், சிறுகாக்கைபாடினியம், பல்காயம், நற்றத்தம், சங்கயாப்பு முதலாய இலக்கண நூல்களிலிருந்து 1034 நூற்பாக்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். அம் மேற்கோள் நூற்பாக்களின் அருமையும் பெருமையும் உணர்ந்து அவற்றை அடைவு செய்ய வேண்டும் என உட்கொண்டேன். அதனை முடித்த பின்னர்த் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களிலும் சிலப்பதிகாரம் முதலான இலக்கிய நூல்களிலும் உரையாசிரியர்களால் எடுத்தாளப் பெற்ற மேற்கோள் நூற்பாக்களையும் தொகுக்க வேண்டும் என்னும் உணர்வால் அவற்றையும் தொகுத்தேன். ஆகச் சிதறிக் கிடக்கும் இலக்கண மேற்கோள் நூற்பாக்கள் மட்டும் ஈராயிரத்தையும் தாண்டியிருக்கக் கண்டு கழிபேருவகை யுற்றேன். அவற்றை அகர வரிசைப்படுத்தி "மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை" என்னும் பெயருடன் தனி நூலாக அமைத்துக் கொண்டதுடன் தெள்ளிதின் ஆசிரியர் பெயர் புலப்படும் நூற்பாக்களைத் தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்க்கும் ஆர்வமும் மீதூரப் பெற்றேன். அவ் வகையில் காக்கை பாடினியமும், அவிநயமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.