பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

15

ஊணும் நீரும் 'போக்கு வரவு' புரிய இடனாக இருக்கும் 'வாய்' என்னும் உறுப்பும் நோக்கத் தக்கதே! 'வாய்' என்பது 'வழி' என்னும் பொருள் தருவதை இவற்றால் உணரலாம். வரும் வழி, வருவாய்! செல்லும் வழி, செல்வாய்!

‘வாய் என்னும் நீர்நிலை இடப்பெயர், ‘கணவாய்’ எனப் படுவானேன்? நீர் வெளியேறுவதற்கு மடையில் கண்கள் உண்டு! என்ன கண்கள் அவை? புலிக்கண், மான் கண், துடுப்புக் கண், நாழிக் கண் என்பவை (போன்றவை) அவை. கண்ணே, நீர் வெளிப்படுத்தும் வாயாக இருத்தலால் 'கண் வாய்' எனப் பெயர் பெற்றது. 'கண் வாய்' என்பதன் கொச்சை வடிவே இந்நாள் பெருக வழங்கும் ‘கம்மாய்' என்பதாம்!

-

-

"கண்வாய்” என்பதன் உண்மை உணரா ஆய்வாளர், கம்மாய்' என்பதை மெய் வடிவாய்க் கொண்டு 'கம் - நீர்; வாய் டம்; கம்மாய் நீர் வெளியேறுமிடம் என வேற்றுச் சொல்லாகக் காட்டி விம்மிதமும் உற்றனர்! தோய்ந்த புளிப்பமைந்த மாவால் ஆக்கும் பண்ணியம், 'தோயை - தோசை -' என ஆனதை அறியாமல், 'தோ-இரண்டு; சை-ஒலி' இரண்டொலி தருவது என வேற்றுச் சொல்லாக்க வல்லார், 'கம்மா’யைச் ‘சும்மா’ விடுவாரா? நிற்க.

கண் வாய்க்கு நீர் வரும் வழி, கால்வாய் எனப் பட்டதன்றோ! அதனை ‘ஆகு ஆறு' என்க.

கண் வாயில் இருந்து நீர் செல்லும் வழி வாய்க்கால் எனப்பட்டதன்றோ! அதனைப் 'போகு ஆறு' என்க.

நீர்வரவு செலவுகளை நாம் நினைத்தால். பொருள் வரவு செலவும் புலப்படுமே! அப்புலப்பாட்டை முந்துறக் கொண்டு. மொழிந்தவர், பொய்யாமொழியார்.

கால்வாயில் இருந்து கண்வாய்க்கு ஒரு நாள் அல்லது இருநாள் நீர் வரலாம். வந்த நீர், பயிருக்கு எத்துணை நாள்களுக்குச் சென்று ஊட்டுகின்றது! ஒரு நாள் வரவு நீர்' ஒருநாள் அளவிலேயே செலவாகிவிட்டால் என்ன பயன்? ஒருநாள் வரும் நீரை, ஒருபயிர் விளைவுக்குப் போற்றிக் காத்து விடுவதன்றோ கண்வாய்! ஆதலால், பொருள் நிலை, வரவு செலவு வகைகளைப் புகல்வது கால்வாயும் வாய்க்காலுமாம்.

ஒருவர்க்கு ஒரு திங்களுக்கு ஒருமுறை வருவாய் வரலாம்! "மாத ஊதியர்' நிலை அதுதானே!