பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சலம்

வாய்க்காலில் நீர் ஓடுகின்றது. அதில் ஒருவன் தன் கையை வைத்து ‘நில் நில்' எனத்தடுக்கின்றான். நீர், நில்லாமல் ‘சலசல’ என்னும் ஒலியுடன் ஓடுகின்றது. கையை வைத்து நீரைத் தடுத்தவனுக்கு, தான் தடுத்து நிறுத்தியதற்கு நீர் அழுவது போலத் தோன்றுகிறது! அதனால்,

“இரைந்ததென் அழுவையோ” “செல்! செல்!”

என விடுத்தான். இது மனோன்மணிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி.

நீர் இரைச்சலிட்டுச் செல்வது எவரும் அறிந்தது. நீரின் இரைச்சல் ஒலி வெவ்வேறு வகையாகக் கேட்கும். அதனால் அருவி, முழவம் போல் ஒலிக்கிறது என்றும், கல்லெனக் கரைந்து வீழ்கிறது என்றும், ஒல்லெனத் தவழ்கிறது என்றும், சலசல என்று ஓடுகின்றது என்றும் ஒலிக்குறிப்போடு சொல்வது வழக்காயிற்று. இவ்வொலிக் குறிப்புகளில் ஒன்றே சல், சல், சல,

சல, சலம் என அமைந்ததாம்.

நீர் 'சல சல' என்னும் ஒலியுடன் ஓடுவதால் 'சலம்' என்னும் பெயர் பெற்றது. 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்' என்றார் அப்பரடிகள். ‘சல சல மும்மதம் சொரிய', என்பதும் ஒரு தமிழ்ப் பாடல் அடியே! (சீவக.82)

'சலம்' ஆகிய நீர் சமையலுக்குக் கட்டாயம் வேண்டும். அச்சமையல் அறையிலேதான் கலங்களைத் தேய்த்தல். கழுவிக் கொட்டல், வடித்தல் ஆகியன நிகழும். ஆதலால், அவ்வறைக்குள் வடிக்கப்பட்ட நீர் புறம்போதற்கு வாய்ப்பாக குழியும் குழையும் அமைப்பர். அவ்வமைப்பின் பெயர். 'சலக் கால் புரை' என்பதாம். அதுவே ‘சலக்காப்புரை, கலக்கப் புரை என வழங்கப்படுகின்றதாம். சலம் நீர்; கால் வழி; புரை துளை.