பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் 15

நறுக்கிச் சேர்ப்பதால், இரண்டைச் ‘சுவடி' என்னும் வழக்கம் ஏற்பட்டது. சுவடி என்னும் சொல் தோன்றிய வரலாறு இது. சுவடி என்பதற்கு இணை, இரண்டு, இரட்டை என்பதே பொருள்.

உருவமும் பருவமும் ஒத்த இரண்டு பிள்ளைகளைச் ‘சுவடிப் பிள்ளைகள்' என்பதும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ணை சேர்க்கும் காளைகளைச் சுவடிக் காளைகள் என்பதும் நாடறிந்த செய்தியே. இச்சுவடிகள் இணைப்பொருள் தருவனவேயாம்.

'நாட்டுக்கு நாட்டு மட்டம் - நாமிரண்டும் சோடி மட்டம்’ என்பதொரு நாட்டுப் புறப்பாட்டு! இவ்வாறு இரண்டு என்னும் பொருள்தரும் சுவடியாம் சோடி ‘ஒரு சோடி செருப்பு' 'ஒரு சோடி வேட்டி' எனப் பேச்சு வழக்கிலும் வழங்குகின்றது. சுவடியில் இருந்து பிறந்தது சுவடு என்னும் சொல். எப்படி?

இரண்டு கால்கள் நிலத்தில் படியும் - பதியும் படிவை அல்லது பதிவைச், ‘சுவடு' என்பது இலக்கிய வழக்கு. பிரிவு மேற்கொண்ட தலைவியைப், பிரிவு மேற்கொண்ட செவிலித் தாய் தேடிவரும்போது, 'சுவடு கண்டு இரங்கல்' என்பதோரு துறையில் புலவர்கள் பாட்டியற்றல் அகப்பொருள் இலக்கணச் செய்தி. ‘சுவடுகண்டு' என்பது, ‘தலைவியின் கால் தடம் கண்டு' என்னும் பொருள் தருவதாம்.

"மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

என்பது அப்பரடிகள் வாக்கு (4:3:1). இதில், சுவடு' கால் தடத்தைத் குறிக்கும்.

கால் தடத்தைக் குறிக்கும் ‘சுவடு’ குதிரையில் ஏறுதற்குக் கால் வைக்கும் ‘அங்க வடி'யையும் குறிக்கலாயிற்று. மயிலேறி விளையாடும் மகிழ் முருகனுக்குக் குதிரை மயில்தானே! அம் மயிலேறும் ‘பக்கரை’யையும் சுவடாகக் கொண்டனர். அதனால் அகரவரிசையாளர், சுவட்டுக்கு அங்கவடி, பக்கரைகளையும் ணைத்தனர்.

இனிச் சுவடி ‘சோடி' யானது போலச், சுவடு 'சோடு' ஆகியது. 'காலுக்குச் சோடில்லை' என்பது புலவர் ஒருவரின் பெருங்கவலை. “சோட்டால் அடிப்பேன்' என்பது சினத்தான் செருக்குரை.