பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

229

சமயந் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதினும், அக்கொள்கை களை அழுந்தக் கற்றார் என்பதே சிறக்கும். ஒருகால் அச்சமயத்தார்க் கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்குமானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை. அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்ந்தார் நச்சினார்க்கினியர் எனின், இவர் சூழ்ச்சியாளர்; பயன்கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி : ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் நாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம்.

காலம்

நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும், நன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர்களுக்கும் பிற்பட்டவர் இவர் என்பதற்குச் சான்றுகள் உண்மையால் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெளி வாகும்.

தமிழ்ம்மை

“தத்தம் புதுநூல் வரிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க" என்றும் (புறத். 35),

'இனித் தேவர்க்குரியவாக உரிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க” என்றும் (புறத்.12),

66

அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்” என்றும் (நூன்.1),

66

'தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க” என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார்.