பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

235

‘முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க்கினியர் (புறத்.10), "முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறி களும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்” எனச் செறிவு மிகக் கூறுகிறார்.

அரசியலாவன மடிந்த

இனி இதே நூற்பாவில், "சிறப்புடை உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனை யும், ஒத்தபடை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலாயினவுமாம்” என்று சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள்

'குற்றியலிகரம்’ உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். “ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்” என்கிறார் (மொழி.1).

இராக் காக்கை, இராக் கூத்து எனவரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இராஅக் காக்கை, இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம்.

“இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்” என்பதற்குக் ‘கோவில்' என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது 'கோயில்' என்றே இருந்திருக்கும். ‘படியெடுத்தோர் பிழையோ’ என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர் மரபு நிலை மாற்றாமல் 'கோயில்' என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. 'கோவில்' என்பது 19ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு.

வழக்குகள்

‘புடோலங்காய்' என்பதைப் புள்ளிமயங்கியல் புறநடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். 'புடலங்காய்' என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்!