பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

247

ஆற்றிற் செத்த எருமைக்கும் ஊர்க்குயவர்க்கும் என்ன தொடர்பு? அதுதான், 'இயைபு இல்லாததை இயையக் காட்டுவது’;

அது வருமாறு:

மாட்டு வணிகன் ஒருவன், எருதுகள் (மாடுகள்) சில பிடித்தான். அவற்றைத் தன் ஊர்க்கு ஓட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. தன் எருதுகளை நீர் குடிக்கவிட்டுக்காலாறச் சிறிது பொழுது தங்கிப் புறப்பட்டான். அப்போது எதிர்பாராமல் ஆற்றில்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. அவ்வெள்ளத்தால் சில எருதுகள் அடித்துச்செல்ல அவை இறந்துபட்டன. ஆற்றில் இறந்து கிடந்த எருதுகள் நாறலாயின. அடுத்திருந்த ஊரவர்க்கு நாற்றம் தாங்கமுடிய வில்லை. இறந்த எருதுகளை எடுக்கவும் ஊரவர் எவரும் முன்வரவில்லை.

இந்நிலையில் ஊரவர் இவ்வெருதுகளை அகற்றுதல் எவர் பொறுப்பு என ஊர்க் கணக்கனை வினவ, அவன் தனக்கு வழக்கப்படி தரவேண்டிய தொகையைத் தராத குயவனைப் பழிவாங்க நினைத்துப் பழைய ஏடு ஒன்றை எடுத்து ஒரு பாடலை எழுதி ‘ஊரடங்கல்’ ஏட்டுள் ஊடுவைத்து ஊரவர் முன் படித்துக் காட்டினான். அப்பாட்டு இது:

"காட்டெரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகையான் மேற்கே மேகம் தோன்றி மின்னி இடித்து மழைபொழிந்து யாற்றில் நீத்தம் பெருகி

அடித்துக் கொல்லும் எருமைகளை

ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல்

இவ்வூர்க் குயவர்க்கு என்றும் கடனே”

மட்கலங்கள் எருவால் சுடப்படுதலால் எழுந்த புகையே, வான் முகிலாகி மழைபெய்ய அந்நீர்ப் பெருக்கால், எருது இறந்ததால், அதனைக் கரையேற்றல் குயவர் கடன் என்று தீர்மானித்தது, பொருந்தாததைப் பொருத்திக் காட்டிய புனைவு தானே.

அதிகாரம் என ஒன்று வாய்க்கப் பெற்றால் தன்னலத்தார் எப்படி நடந்து கொள்வர் என்பதும், எப்படியெல்லாம் பொய்ப்புனைவு செய்து அறத்தின் கழுத்தை அறுத்து விடுவர் என்பதும், ஏமாந்தவர்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை கிட்டும் என்பதும் இந்நாள் வரை காட்சிச் செயலாகத் தானே உள்ளது! சேனாவரையர் காலத்தில் அவர் கேட்ட செய்தி, காலமெல்லாமா தொடர வேண்டும்? இதனால், ஏட்டறிவோடு நாட்டறிவும் அருமையாகப் பெற்றுப்பதிவு செய்தவராகிறார் சேனா வரையர் என்பது விளக்கமாம்.