பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

165

63. சென்னை

இராமகவிராயர் ஒருமுறை சென்னைக்குச் சென்றார். அங்குச் சேர்ந்ததும் அவர் சிவபெருமான் ஆகி விட்டாராம். அப்படியென்ன ‘திடீர்ப் பதவி' பெற்றார்?

சிவபெருமான் நான்முகனாகிய அன்னம் அறிய முயன்றும் அறிய முடியாதவர். இவர்க்குச் சென்னை யில் சோறு கிடைக்க வில்லை. ஆதலால் இருவரும் அன்னமறியாதவர் ஆனார்.

சிவபெருமான் ஒரு சிரம் (தலை) கைக்கொண் டவர். இவர் சென்னையில் சிரங்கைக் கொண்டார்.

சிவபெருமான் தலையில் பிறைமதி (அரைச் சோமன்) உண்டு. துண்டு, வேட்டி என்னும் ஆடை இரண்டுள் துண்டை இழந்து அரையில் மட்டும் ஆடை உடுத்து (அரைச் சோமன் கட்டி) அலைந்தார்.

சிவபெருமான் சடைபோல இவர்க்கும் சடை யாகி விட்டது. குளிக்காமையாலும் எண்ணெய் தேய்க் காமையாலும் நேரிட்டது இது.

சிவபெருமான் வெண்ணீறு விளங்க இருப்பவர். இவர்க்கோ உடலெல்லாம் புழுதி! புலவர் சிவமான செய்தி சிறந்த சுவையானது அல்லவா!

“சென்னபுரி மேவிச் சிவமாயி னேன்நல்ல அன்ன மறியா தவனாகி – மன்னுசிரங்

கைக்கொண் டரைச்சோமன் கட்டிச் சடைமுறுக்கி

மெய்க்கொண்ட நீறணிந்து மே."

மன்னு - நிலைத்த. மெய் - உடல். நீறு - திருநீறு. சோமன் - நிலா, உடை.