பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

195

1. கழிசடை

அறிவு தெளிவு ஆற்றல் பண்பாடு என்பவற்றை யுடையது மாந்தர் பிறவி. ஆனால், அவற்றை இல்லாதவரும் தோற்றத் தாலும் உறுப்பாலும் மாந்தர் எனவே காணப்படுகின்றனர். அவரை எண்ணிய வள்ளுவர் முடியில் இருப்பதும் 'முடி'தான்; அம் முடியில் இருந்து கழிந்ததும் ‘முடி’தானே! இரண்டன் நிலையும் ஒப்பாகுமா? என நினைகிறார்.

அவரும் மாந்தர்; இவரும் மாந்தர் என்பது தகுமா; தகாதே என்றெண்ணி,

“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை

என்றார்.

இப்பாடல் சிக்கல் இல்லாதது; எளிதில் பொருள் விளங்குவது. குறளைப் படித்தார்க்கும் கேட்டார்க்கும் எல்லாம் தெரிந்தது. கல்லா மாந்தரும் இதனைக் கேட்டு அறியாதவரும்கூட அறியும் வகையில் மரபுச் சொல் ஒன்று வழங்குகிறது. சூத்திரம் என்றும் கலைச் சொல் என்றும் சொல்லும் சிறப்பொடு வழங்கி வருகிறது. தினையளவுப் பனி நீரில் தென்னைமரம் மட்டுமா பேரால மரமும் பெருமலையும் தெரிவது போல் தெரியச் செய்வது அது.

ஒழுங்கு அற்றவரும், மதிக்கத் தகாதவரும், இழி செயல் செய்பவரும் ஒதுக்கத் தக்கவரும் அருவறுப் புக்கு இடமாகி இருப்பவரும் ஆகியவரைப் பொது மக்கள் ‘கழிசடை’ என்று பழிக்கின்றனர் அல்லரோ! அக் கழிசடை என்பது என்ன?

-

சடை குடுமி - முடி ஆயவற்றில் இருந்து கழிந்தது தானே! இருபத்தொன்பது எழுத்துகளையுடைய குறளை நான்கு எழுத்துகளாகக் குறுக்கி வள்ளுவக் குறட் பொருளை விளக்கும் தேர்ச்சி இஃதாகி இன்பம் சேர்க்கிறது.