பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆய்வு

தாமோதரனார் பதிப்பித்த நூல்களின் பதிப்புரைகளிலே சில ஆய்வுகளைச் செய்துள்ளார். அவை அ. தமிழ் என்னும் சொல்லாய்வு,ஆ.பதினெண் கீழ்க் கணக்கு ஆய்வு, இ. இலக்கண விளக்கச் சூறாவளி ஆய்வு, ஈ. இலக்கிய வரலாற்று ஆய்வு என்பன குறிப்பிடத்தக்கன.

அ. தமிழ்

தமிழ் என்னும் சொல்லாய்வு குறித்து வீரசோழியப் பதிப்புரை, கலித்தொகைப் பதிப்புரை ஆகிய இரண்டிலும் செய்கின்றார். தமிழும் வடமொழியும் நாவலந்தீவின் பழைய மொழிகள் என்றும், இரண்டுமே தெய்வத்தன்மை உடையவை என்றும், வடமொழி பனிமலைக்கு அப்பால் இருந்து வந்த தென்றும், தமிழ் கங்கை வரை பரவியிருந்தென்றும். ஆரியர் வடபால் நிலங்களைப் பற்றிக்கொள்ளத் தமிழர் தென்பால் வந்தவர் என்றும் இதனால் தமிழே நாவலந்தீவின் பழமையான மொழி என்றும் கூறுகின்றார். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பது கொண்டு அது முந்திய மொழியெனல் கூடாது என்றும் கூறுகிறார்.

இகழ்,இமிழ், உமிழ், கமழ், கவிழ், குமிழ், சிமிழ் என ழகரப் பேறு பெற்ற சொற்கள் போலத் தமிழ் என்னும் சொல் தனிமைப் பொருள் குறித்த தமி என்னும் வினை அடியாற் பிறந்து, வினை முதற் பொருண்மை உணர்த்திய விகுதி குன்றித் தனக்கு ணையில்லா மொழி என்னும் பொருள் பயப்பது என்கிறார்.

தமி என்பது தமியேன் என்பது போல இழிவுப் பொருள் தருமோ என வினவி, ஓரடியில் பிறந்தும் அடியேன் அடிகள், அளியேன் அளியாய் என்பன போல ஒன்று இழிவும் ஒன்று உயர்வும் உணர்த்தின என்கிறார். செவிக்கு இனிமை பயத்தலால் இனிமைப் பொருளுடைய தூய்த் தமிழ் என்பாரும் உளர் எனப் பிறர் கருத்துக் கூறி அஃதெவ்வாறு ஆயினும் தமிழ் என்பது தென் மொழிக்குத் தென் சொல்லாகிய பெயரேயாம் என்று உறுதிப் படுத்துகின்றார்.