பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

17

வெளிவந்தன ஆகலின் தம் இளந்தைக் கல்வியில் இவற்றைச் சுட்டினார் அல்லர் அடிகளார். இவையும் பிறவும் பின்னே கற்றவையாம்.

மதுரை நாயகம் :

ஆசிரியர் நாராயண சாமியாரின் மாணவர்களுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். அவர் ஒரு சாலை மாணவர் ஆதலின், மறைமலையார்க்குப் பேரன்பராக விளங்கினார். அவர் திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரரின் உறவினர். திருச்சியைச் சேர்ந்த அவர் நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான வெளிப்பாளையத்தில் இருந்தார்; மறிப்பர் (அமீனா) என்னும் வேலை பார்த்தார். அகவையால் தந்தையனையார்! அடிகளார் அவரைத் தந்தை யுரிமையராய்க் கொண்டு பழகினார். அவர் அடிகள் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டி வளர்த்தார்.

வெளிப்பாளையத்தில் திருமாலிய (வைணவ)ப் பேரவை ஒன்று இருந்தது. அவ் வவையில் சொற்பெருக்காற்றிய ஒருவர் மாலியப் பெருமையுரைக்கும் அளவில் நில்லாமல். சிவனியப் பழியும் உரைத்தார். தனைக் கேட்ட சிவனியப் பெரும்பற்றாளராம் மதுரை நாயகர் அப் பொழிவை மறுத்துரைக்க அவாவினார்.

சோமசுந்தர நாயகர் :

அந்நாளில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் சென்னையில் இருந்தார். அவர்தம் சைவ வீறும், பிற சமயக் காள்கைகளைச் சூறைக்காற்றில் பறக்கும் சருகெனச் சுழற்றியடிக்கும் திறமும் அறிந்து சேதுநாட்டு வேந்தர் சைவசித்தாந்த சண்டமாருதம்' என விருது தந்து விழா எடுத்துப் போற்றினர். அதனால் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் எனச் சமய உலகில் பேருலா வந்து பெரும்புகழ் கொண்டு விளங்கினார். அச்சோமசுந்தரரை மதுரை நாயகம் நாகைக்கு அழைத்துச் சிவனியப் பழியைத் துடைத்துக் கொள்ள விரும்பினார். அவ்வாறு மறுப்புக்காக அழைக்கப்பட்ட சோமசுந்தரர் மறுபடி மறுபடி நாகைக்கு வந்து பொழிந்து சிவப்பயிரை வளர்ப்பாரானார். இது மறைமலையார்க்குக் காலத்தால் வாய்ந்த மழையெனக் கவின் செய்தது. இலக்கிய இலக்கணத் தேர்ச்சி மிக்க அடிகளைச் சிவனியப் பெருந் தேர்ச்சியராகச் செய்தது இப் பொழிவாகும். அன்றியும் அவரை எழுத்துத் துறையில் புகுவித்த பேறும் அதற்கு உண்டு.