பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

87

குட்டியன்றோ வாங்கியிருக்கிறார். கலைக்குட்டி பெரிதானவுடன் பிணைதேடி மலை நாடலாம் என்பது அவர் எண்ணமாயிற்றே. ஆதலால் பிணைமான் குட்டிதேடும் வேட்டம் எழுந்தது; எழுதினார்; முயன்றார்.

இணைசேர்க்கும் வண்ணம் பிணைமான் குட்டி கிடைத்திலது. அதனால் கலைக்குட்டி மலைநாடு முன் விலையாக்கி விட வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது போலும். ஆதலால் தமிழ்ப்பாவை ஆசிரியர் அருளர் (கருணை)க்கு “என்னிடம் ஒரு புள்ளிமான் கலை இருக்கின்றது அதை 150 அல்லது 100 உரூபாவிற்கு வாங்குவார் யாரேனும் ஆ’கு (மதுரையில்) உண்டா? என்று கேட்டு எழுதினார் (5-12-64).

அவர் விரும்பிய வண்ணம் பிணைக்குட்டி கிடைத்ததோ? கலைக்குட்டிவிற்கப்பட்டதோ? கிடைத்த கடிதங்களில் அதற்குமேல் செய்தி கிட்டவில்லை.”

ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவின் உறையுளாகத் திகழ்ந்த பாவாணர் அன்புள்ளம் ஒருமனைத்தேடிக் கொணர்கிறது; அருளுள்ளம் விடுதலை தரமுனைகின்றது. எதிர்பார்க்க இயலாத முரண்கள் இவை! வேர்ச் சொல்லாய்விலேயே வேளையை யெல்லாம் செலவிடும் ஈடுபாட்டாளர் பாவாணர். பண்ணிசைத்துப் பாடவும் கருவி கொண்டு இயக்கவும் தெரிந்தவர்; இசத்துறையில் பணியாற்றவும் வேட்கைகொண்டவர்; இசை வரலாறும் எபதியவர்; திருவள்ளுவர் பஜனைக் கீர்த்தனம் இயற்றியவர்; அவர், வீணையை விற்று மான்குட்டி வாங்குகிறார்!

உள்ளொத்த நேயம் ஒன்றியிருந்தால் முரணும் அரணாம் என்பது தெளிவாம். நேயத்தின் முன்னேமுரணென்ன! அரணென்ன!

மங்கையர்க்கரசி திருமணம் சென்னையில் 19-4-65 இல் நடைந்தேறியது. "மணவாளப்பிள்ளை பள்ளியிறுதி தேறியவர்; எண்ணூரில் உள்ள இயங்கித் தொழிற்சாலையில் கணக்கர்" (29-3- 65 ; வி.அ.க.) அத்திருமணத்திற்குச் சென்ற எழுத்தாளர் மன்றத் தலைவர்பு. மனோகரனார் வழங்கிய நன்கொடையைத் “தங்கள் ஒப்புயர்வற்ற தமிழ் நன்கொடையை நானும் என்மகளும் என்றும் மறவோம். நூறுரூபா அளித்தது தாங்கள் ஒருவீரே" (24-4-65) என்கிறார்.