பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அவ்வறையின் சீர்மையைப் பற்றிப் பல சொல்ல வேண்டா. ஒன்று போதும், மேலைநாளில் நூல் நிலையத்திற்கு வரும் ஆங்கிலவராம் அலுவலர்கள் குதிரைகளிலோ குதிரை

வண்டிகளிலோ வருவர். அவர்கள் குதிரைகளைக் கட்டிப் புல்போடுவதற்குக் கட்டடம் வேண்டும். வெள்ளைக் காரர்களின் குதிரை வெளியே வெயிலில் நிற்குமா? அக்குதிரைகளைக் கட்டி வைத்தற்குக் கட்டப்பெற்ற கொட்டடி தான் அது. குதிரைகளுக்குக் கொள்ளும் புல்லும்போட்டுத்தின்ன வைத்த நிலைப் பெட்டிகள் இன்றும் மாறா நினைவுச் சின்னமாய்த் திகழ்வதை ஆவலுடையார் நேரில் கண்டு மகிழலாம்! பூரிப்படையலாம்! உயிரோடே ஒழித்து விட்டு நினைவுச் சின்னம் எழுப்பிப் போற்றுவது தானே நம்மவர் நயத்தகு தொண்டு.

அகர முதலித் திட்டத்தின்மேல் வேண்டா வெறுப்பா? வேண்டும் என்றே செய்யும் இழிவா? செயலாற்ற மாட்டாத விளங்காத்தனமா? அலுவலர்கள் வெறுப்பின் வெளிப்பாடா? திருப்புன்கூர் நந்தி மறைப்பன்ன இடைத்தடுப்பா? தமிழ்ப் பகைவர் உட்புகுந்தாற்றும் உருக்குலைப்பா? பாவாணர்மேல் பகையா? எல்லாமா? ஒன்றும் புரியவில்லை!

உலகிலும் நம் நாட்டிலும் பாவாணர் அகர முதலிதானோ ஒரோ ஒன்றாய்த் தோன்றியது? எத்தனை அகரமுதலிகள் உள்ளன; ஒவ்வொரு மொழியாளரும் திட்டமிட்டுச் செய்துள்ளனரே! ஆக்கசுப் போர்டு ஆங்கிலப் பேரகர முதலி:

1858-ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 7-ஆம் நாள் இவ்வகர முதலிப் பணிதொடங்கியது. 1929 -ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 19-ஆம் நாள் பணிமுடிந்தது. ஆகலின் இப்பணி நிகழ்ந்த காலம் 70 ஆண்டுகள்.

நான்கு பதிப்பாசிரியர்கள் தலைமையின் கீழ் நானூற்றுவர் நிலையாய் அமர்ந்து பணிசெய்தனர். சென்ற செலவு 30,50,00 பவுண்.

சமற்கிருத அகர முதலி :

1948 - ஆம் ஆண்டில் தொடங்கியது. 28 ஆண்டுகளுக்குப் பின் 1976-இல் முதன் மடலத்து முதற்பகுதி 216 பக்க அளவிலும், 1977 - இல் முதன்மடலத்து இரண்டாம் பகுதி 288 பக்க அளவிலும் வெளிவந்துள்ளன. பணி தொடர்கின்றது இதன் பதிப்புப் பணியாளர் 32 பேர். பதிப்புச் செலவுத் தொகையாக இந்திய அரசு