பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் நுண்மாண் நுழைபுலமிக்க ஒரு மொழியியல் அறிஞர். இவர் தம் ஆராய்ச்சிகள் மொழி அளவில் தோன்றி, அம் மொழி பேசும் மக்கள் - அம் மக்கள் வாழும் நிலம் என்றெல்லாம் பரந்து விரிந்து செல்லக் காணலாம். இங்ஙனம் இவ் அறிஞர் ஆராய்கின்ற போது அவர்தம் பட்டறிவில் பட்ட உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படக் காணலாம். ஆனால் அவை போற்றித் தொகுத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொன் மொழிகள் என எண்ணிச் செயல்படுவார் இல்லை.

இக் குறையினைப் போக்கும் வகையில் பாவாணர் அவர்களின் மொழியாற்றலில் பேரீடுபாடு கொண்ட கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள், பாவாணர் சிந்தனையினின்று சிதறிய பொன்னனைய கருத்துகள் பலவற்றைத் தொகுத்து “பாவாணர் பொன் மொழிகள்” என்னுந் தலைப்பில் இந்நூலினை உருவாக்கியுள்ளனர். பட்டறிவுக் கருவூலமாகப் பயன்தரும் இதனைத் தொகுத்தளித்தபுலவர் அவர்கட்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியது. பாவாணர் உவமைகள், பாவாணர் பொன்மொழிகள் ஆகியன பாவாணர் அன்பர்களின் இல்லங்கள் தோறும் இருக்க வேண்டிய பயனுள்ள நூல்களாகும் என்பதில் ஐயமில்லை.