பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

தங்குவாரும் இருந்தனர். இத்தகையவருக்கு மனைவியாக வாய்த்தவருக்கு எத்தகைய பெருநிலை வேண்டும்! தொண்டுள்ளம் வேண்டும்! அவ்வளவும் அமைந்தவராக வாய்த்தார் வள்ளியம்மை

யார்.

“என்னைப் பெற்றோர் என்னோடு பிறந்தோர்

என்னை நட்டோர் யாவரும் தன்னுடை உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த

செயிரிலா மனத்தள்; தெய்வமே அணையள்”

என்று வள்ளியம்மையாரைப் பாராட்டுகிறார் சிதம்பரனார். கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் பாராட்டி வாழ்ந்தார் வள்ளியம்மையார். அவரே தெய்வமாகக் காட்சி வழங்கினார் சிதம்பரனார்க்கு. வாழ்க்கைத் துணை என்பது இதுதானே! இன்னும் அவரைப் பற்றிச் சொல்கிறார்:

'எண்ணிலா நண்பரை இழுத்துக் கொண்டுயான் உண்ணச் செல்லுவேன் உரையாது முன்னர்; அறுசுவை அடிசில் அன்பொடு படைப்பாள்; சிறிதும் தாமதம் தெரிந்திலேன் ஒன்றும்; பாடுவள் இன்புறப் பாதம் வருடுவள் உடையோ நகையோ ஒன்றும் என்றும்

படைஎனக் கேட்டிலள் பண்பெலாம் செய்தனள்.'

>>

இராமையா தேசிகர் என்பார் ஒரு துறவியார். அவர் கண்ணொளி இழந்தவர், சிதம்பரனாரை அடைந்து, அவர் துணையில் வாழ்ந்தார். இல்லத்திலே உறைந்தார். அம்மையார் அவரைத் தம் தந்தையினும் மேலாக மதித்துப் பேணினார். தேசிகர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை அறிந்த உற்றார் உறவினர் பழித்தனர்; ஊரார் குறை கூறினர். அக் கருத்தை அம்மையாரிடம் உரைத்தார் சிதம்பரனார்; என்ன செய்யலாம் என ஆராய்ந்தார்.

அம்மையார், "எல்லா உயிர்களும் கடவுளாக இருக்கின்றன. உருவம் முதலியவற்றால் எந்த வேற்றுமையும் அமைவது இல்லை. கற்பனையாகப் படைக்கப்பட்டது சாதி எனத் தாங்களே கூறியுள்ளீர்கள். போலிச் சாதி, துறவியைத் தொடர்வதும் உண்டோ? ஆதலால் பழிப்பவர் சொல்லை மதிக்காமல் ஒழிப்போம். இவர் இங்கேயே இருக்கட்டும்" என்று கூறினார்.