பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

'இராவ் பகதூர்' என்னும் பட்டத்தையும் அரசினர் வழங்கினர். ஆங்கில நிலநூற் கழகத்தார் 'F.R.C.S.' என்னும் பட்டம் வழங்கினர். சென்னை மாநிலத் தமிழ்க் கழகம் 'செந்தமிழ்ப் புரவலர்' என்னும் பட்டத்தையும், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் 'சித்தாந்தப் புலவர்' என்னும் பட்டத்தையும், மதுரை ஆதீனம் 'சைவஞாயிறு' என்னும் பட்டத்தையும் வழங்கின. 'கொங்குநாட்டு வரலாறு' என்னும் இவர் நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு வழங்கப்பெற்றது. இன்னும் பல்வேறு பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுச் சிறப்புற்றார் கோவை கிழார்.

'ஆயிரம் பிறை கண்டவர்’ என்னும் புகழ், எண்பது வயது அடைந்தவர்க்கு உண்டு. அத்தகைய புகழைப் பெற்றார் கோவை கிழார். தம் பெருமுதுமையில் தம் மூத்த திருமகனார் இல்லத்தில் சென்னையில் வாழ்ந்தார். ஆயினும் தாம் தோற்றுவித்த சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரித் துணைத் தலைவராக விளங்கினார். இவ்வாறு பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகையாம் கோவைகிழார் 3-12-69ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் தமிழ்த் திருவுடலம் திருப்பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரித் தோப்பில் அடக்கம் செய்யப்பெற்றது. தமிழே வாழ்வாகிய கோவை கிழார் தமிழ்ச்சோலையிலே என்றும் மணம்பரப்பி வாழ்வாராக.