பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

125

மாணவராகித் தெளிந்து கற்ற பலர் பல்வேறு உயர் பட்டங் களையும் பதவிகளையும் பெற்று ஆராய்ச்சியாளராக விளங்குகின்றனர். அறிவுத்தொண்டு புரிந்து வருகின்றனர்.

புலவர்களை அன்றிச் செல்வர்களும் இவரிடம் செந்தமிழ் பயில விழைந்தனர். குறுநிலக் கிழாரும், பெருநிலக் கிழாரும், வணிகரும் என வள வாழ்வு வாழ்வோர் பலர் புலமை நலம் பெற்றுப் புகழ்பேறு எய்தினர். அத்தகையவருள் ஒருவர் கலைத்தந்தை கருமுத்து தியாகராசச் செட்டியார் ஆவர்.

நாமக்கல்லுக்கு அண்மையில் இலத்திவாடி என்பதோர் ஊர் உள்ளது. அவ்வூர்ப் பெருநிலக் கிழார் இராமசாமி ரெட்டியார் என்பார். அவர்தம் ஒரு மகனார் சின்னசாமி ரெட்டியார். அவர்க்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக வரதநஞ்சையர் அமர்ந்தார். அதன் விளைவு வரதநஞ்சையரை நாமக்கல் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் ஆக்கிற்று.

“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்; அன்றி அதுவரினும் வந்தெய்தும், - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;

எனையாளும் ஈசன் செயல்”

என்பதுபோல நாமக்கல் பணி வாய்த்தது. பின்னர்த் தம் ஊர்க்கணக்கர் வேலைக்கு மீண்டார்.

தோரமங்கலம் சலகண்டபுர ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து பல்லாண்டுகள் பணி செய்தார் புலவரேறு! ஆட்சிமுறை மாநாடுகளில் கலந்துகொண்டு சிறந்த தொண்டு செய்தார். காஞ்சிபுரத்தில் கூடிய கருணீகர் குல மாநாட்டில் பெருந் தலைவராக உவந்து தேர்ந்தெடுக்கப் பெற்றுத் தலைமையுரை ஆற்றினார். இனத்தவர்களின் ஒற்றுமை, முன்னேற்றம் ஆகிய கருத்துக்களைப் 'பசுமரத்தாணியினும் பதியும்' சொல்லால் எடுத்துரைத்தார். இவ்வாறு புலமைத் துறையோடு, பொதுப் பணியும் புகழும் ஒருங்கு சேர்வதாயிற்று.

புலமையும் புகழும் மட்டும் வாழ்வில் அமைதி தந்துவிடுவன அல்ல. கருத்துணர்ந்த மனைவி வாய்த்தல் மிக இன்றியமையாத தாகும். அவ் வகையில் எல்லா நலங்களும் ஒருங்கமைந்த இல்லாளைப் பெற்றிருந்தார் புலவரேறு. 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி" என்பதற்கு ஏற்பப் புலவரேறு எண்ணும் எண்ணங்களை எல்லாம் அறிந்து அவர் இன்புறும்