பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

131

சிவவழிப்பாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கந்த சாமியார். பொழுது போவதே தெரியாமல் அதில் ஊன்றிவிடுவார். இந் நிலையில் கல்லூரிக்குக் காலங் கடந்து செல்லும் நிலைமை கூட பலமுறை உண்டாகியது. ஒருமுறை அவ்வாறு நிகழ 'இரண்டு ரூபாய்' பிடித்துக்கொண்டு சம்பளம் வழங்கக் கல்லூரி முதல்வர் கட்டளையிட்டார். அப்பொழுது கல்லூரி முதல்வராயிருந்தவர் இராமகிருட்டிணன் என்பவர். அவரை நோக்கி இவர்,

"மலைகொடுக்கும் புயமுடையாய்! இராமகிருட்டிண பூபால! மகிழ்ந்திந் நாட்டார்

தலைகொடுத்தும் தமிழ்ப்புலவர் தமைப்புரந்தார் நின்கலா சாலை தன்னில்

கலைகொடுக்கும் தொழில்நிற்பேன் சம்பளத்தில் இருரூபாய்

பிடித்துக் கொண்டு

விலைகொடுத்தல் கூலிதரல் எனக்கொடுத்தல் நியாயமதோ மேதக் கோனே”

எனப் பாடினார். பிடித்த பணத்தைத் திருப்பித் தந்தார் முதல்வர். எழுதிய பாட்டுக்கு உடனே பயன் வாய்த்ததற்கு மகிழ்ந்தார் புலவர்.

கந்தசாமியார்க்கு இடையிடையே வறுமை; சொல்ல முடியாத் துயர் தந்ததுண்டு. அதனை மாற்றுவதற்காகச் செல்வர் களையும், மடத்துத் தலைவர்களையும் காண்பதற்குக் காத்துக் கிடந்ததும், காணமுடியாமலும், கண்டும் பயன் பெறாமலும் திரும்பியதும் உண்டு. அந் நிலையில் ஒருநாள் ஒரு வெண்பா வெளிப்பட்டது.

"எண்ணெய்இருக் காது; அரிசி ஏதும்இருக் காது; உறியில் வெண்ணெய்இருக் காதே; என் வீட்டிலே - உண்ண இலையும்இருக் காதே; போய் என்செய்வேன்? பேரூர்த் தலைவனே பட்டீச னே!'

இப் பாட்டு இவர்தம் வறுமைக் கொடுமையையும் மனம் பட்ட பாட்டையும் நன்கு வெளிப்படுத்துகிறது அல்லவா!

கந்தசாமியார் உரிய பருவத்தில் இல்லறம் மேற்கொண்டார். இவர்தம் இல்லக்கிழத்தியார் பொன்னம்மாள் என்பார். அவருக்கு இவரே ஆசிரியராக இருந்து தமிழ் பயிற்று வித்துப் புலவராக்கினார். அறிவாளர் குடும்பம் கலைப் பயிற்சிக் கழகம் என்பதைக் கந்தசாமியார் நிறுவினார்.