பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கோவைப்புலவர் திருச்சிற்றம்பலம்

பிள்ளை

அறிஞர் கந்தசாமி முதலியார் வரலாற்றை அறிந்தோம். அவர்தம் ஆசிரியர் பெருந்தகையாக விளங்கியவர் சந்திரசேகரன் பிள்ளை என்பார் என்பதை அறிவோர் அல்லவா! அப் பெரியாரின் திருமகனாரே இத் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பார். இவர்தம் அருமை அன்னையார் பெயர் பார்வதி அம்மையார் என்பது. சந்திரசேகரனார் திருமனைக் கிழத்தி, பார்வதியார் என வாய்த்தது இயற்கைப் பொருத்தம் அல்லவா!

திருச்சிற்றம்பலனார் இளமைப்பருவத்தில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். அக் காலத்திலேயே தம் தந்தையாரிடம் கல்வி கற்ற கந்தசாமியாரிடம் தனியே தமிழ்க்கல்வி கற்றார். இஃதொரு சிறப்பு ஆகும். சந்திர சேகரனாரிடம் கல்வி கற்ற கந்தசாமியார், சந்திரசேகரனாரின் மகன் திருச்சிற்றம்பலத்துக்கு ஆசிரியரானார். பின்னர்க் கந்தசாமியாரின் மைந்தராகிய சிவக்கவிமணிக்கு, இத் திருச்சிற்றம்பலனாரே ஆசிரியராக விளங்கினார். இவ்வாறு ஆசிரியர் மாணவர்நிலை தொடர்ந்து வருதல் அருமையாகும்.

திருச்சிற்றம்பலம் பிள்ளை அயராத உழைப்பாளர். "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" ஆதலால், அறிவில் சிறந்து விளங்கினார். ஆராய்ச்சித்திறம் மிகுந்து தோன்றினார். இவர்தம் இலக்கண இலக்கியப் புலமை அறிஞர்களால் பெரிதும் போற்றப்பெற்றது; தங்கு தடையற்ற இவர்தம் சொற்பொழிவு பாராட்டுக்கு உரியதாயிற்று. இவர் தம் அறிவு வன்மையும், நாவன்மையும் தமிழ்ப்புலமை நடாத்த விரும்பி அழைத்தன.

கோயமுத்தூரில் உள்ள இலண்டன் கிறித்துவ சங்க உயர்நிலைப் பள்ளியிலும், உரோமன் கத்தோலிக்க உயர்நிலைப்