பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழருள் இயல்பாகப் புகுந்துவிட்ட பல்வேறு பிரிவினை களுள், புதியதோர் பிரிவினையும் புகுந்துள்ளது. அது நம்பு மதம் (ஆத்திகம்) நம்பா மதம் (நாத்திகம்) என்னும் பிரிவாம். "தமிழர் சமயமானது விரிந்த நோக்கமுடைமையால் தெய்வ நம்பிக்கை இல்லாதவரையும் அஃது இகழ்வதில்லை. சமய உயர்நிலை அடைவதற்கு ஏதுவாகிய நல்லொழுக்கமும் மொழிப் பற்றும் தமிழ் நாகரிகப் பயிற்சியும் தமிழ்மக்கள் எல்லாரையும் ஒற்றுமைப் படுத்தும் தன்மையன. இவ்வுண்மையினை யாவரும் கடைப் பிடித்து ஒன்று சேரவேண்டும் என நம்பு மத நம்பா மதப் பிரிவொழித்துத் தமிழினமாக விளங்க வழி கூறுகிறார்."

வெவ்வேறு சமயத்தார் தம்முள் மணந்து கொள்வதற்கும் தமிழர் சமயம் தடையாயதில்லை என்பதைக் கூன்பாண்டியன் மங்கையர்க்கரசியார் மணங்கொண்டு கூறுகிறார் கா.சு.

தமிழ் மொழிப் பற்றும் தமிழரது செந்நெறிக் கொள்கையும் உடையவர் எக்குலத்தராயினும் எம்மதத்தராயினும் தமிழர் சமயத்தைச் சேருதற்குத் தகுதியுடையவரே. ஆதலின் தமிழர் திருநெறி உலகிற்கே பொது நெறியாகும் வாய்ப்புபடையது” எனத் தமிழர் சமயச் செந்நெறியை நிறைவிக்கிறார் தமிழ்க் கா.சு.

சட்டத்துறை மேலோர் கா.சு.தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பரிசும் பாராட்டும் பெற்றவர். நடுமன்ற நாயகராகச் செல்ல வேண்டியவர். நற்றமிழ் மன்ற நாயகராக விளங்கினார். அவர் அழுந்திப் பயின்ற சட்ட நுணுக்கம் தமிழர் சீர்திருத்தத்திற்கும் சட்டத்துணை செய்ய முந்துகின்றது. சீர்திருத்தங் கருதுவார்க்குச் சட்டத் துணை இன்றி மக்களாட்சி முறையில் எவ்வொன்றும் செய்தற்கியலாதே.

கிளர்ச்சி

இப்பொழுதுள்ள 'இந்து சட்டம்' ஆரியருக்கு உரியதாகவும் தமிழருக்குப் பொருந்தாதாகவும் உள்ளது. ஆண் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை கொடுக்கப்படவில்லை. கலப்பு மணத்திற்கு இடந் தரவில்லை. ஆதலால் பொருள் வழக்குச் சட்டமாகிய சிவில் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கிச் சட்டமாக்குதற்குக் கிளர்ச்சி செய்தல் வேண்டும்.