பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

193

மறுத்தாரல்லர். அவர், அடிகளார் கருத்துக்கும் தம் கருத்துக்கும் வேற்றுமை சிலவற்றில் உண்டு என்று பட்டியலிட்டுக் காட்டுவார்:

"அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு; அடியேன் போக்குவேறு. இரண்டுக்கும் சந்திப்புண்டாதல் அரிது.

அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்குங் கருவிகள் இருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் கலைக்குமென்பது எனது உட்கிடக்கை. மறைமலையடிகள் சமய நூல்களிலும் தத்துவ நூல்களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடுங் கருத்துக்களை என் மனம் ஏற்பதில்லை. சமயமும் தத்துவமும் ஆராய்ச்சிக்கு எட்டாதன என்பதும் இவ்வாராய்ச்சியால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகுமென்பதும் எனது

எண்ணம்.

"ஒருவர் பன்மனைவியரை மணக்கலாமென்று அடிகள் அறைவது எனது நோக்குக்கு முற்றும் முரண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது எனது கொள்கை".

இப் பட்டியில் 'தனித்தமிழ்' 'கலப்புத்தமிழ்' வேறுபாடு ம் பெற்றிலது. ஏன்? திரு.வி.க. வும் தனித்தமிழ் ஆர்வலரே; அப் பற்றுமிக்கவரே! எனினும் அவர் நுழைந்த சமயக் களமும், அரசியல் களமும், தொழிலாளர் களமும், அத் தொடக்க நாளில் தமிழாக்கச்சொற்கள் உடனுக்குடன் காணல் அருமையும், கண்டு தருவார் அருமையும் ஆகிய இன்னவையே திரு.வி.க. தனித் தமிழ்நடை போற்றிக் கொள்ளாமைக்கு அடிப்படையாம். தனித் தமிழ்ச்சொற்கள் வாய்க்கும் இடத்தும் வேற்றுச்சொல் பயன் படுத்துகிறாரே எனின், எளிமையும் தெளிவும் வழக்காட்சியும் அவர் நோக்காக அந்நாள் இருந்தன எனலாம். அவர்தம் தனித் தமிழ் வேட்கையையும் அதனைப் பின்பற்ற முடியாமையையும் தேசபக்தனில் எழுதுகின்றார்:

"பண்டைத் தமிழ்மக்கள் உரைநடையில் எனக்குப் பெரும் பற்றுண்டு. பிறமொழிக்கலப்பின்றித் தமிழ்பேசல் வேண்டும். எழுதல் வேண்டுமென்னும் ஆர்வமும் எனக் குண்டு. அப் பற்றும் ஆர்வமும் என்னளவில் கட்டுப்பட்டுக் கிடப்பதைநோக்குழி வீட்டின்பத்தில் வெறுப்பும், தமிழ் நாட்டில் பலமுறை பிறவி தாங்கித் தொண்டு புரிவதில் விருப்பும் எனக்கு நிகழ்கின்றன. யான்