பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

91

மருத்துவமனையில் தங்கியிருந்த போதில் நடுவண் கல்லூரி முதல்வர் திரு. சு. நடேசபிள்ளை, பேராசிரியர் திரு. தி.க. இராசசேகரன், நகராண்மை நலத்துறை மேற்பார்வையாளர் திரு. நாகலிங்கம் ஆகியோரும் வேறு சில நண்பர்களும் வந்து பார்த்து நலம்வினவிச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருஞான சம்பந்தர் குருபூசை விழாவுக்கு வந்திருந்த கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார் அவர்களும், ஆரணி உயர்நிலைப்பள்ளிப் புலவர் முத்துசு. மாணிக்கவாசகமுதலியார் அவர்களும் இவர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து ஆங்கு வந்து பார்த்தனர். இவர்தம் நிலை கண்டு வருந்தி ஒருவாறு உள்ளத்தைத் தேற்றிக் கொண்டு “நீர் ஒரு நொடியும் சும்மா இருக்கமாட்டிடீர்; தமிழ்த் தொண்டு சமயத்தொண்டு செய்வதிலேயே கருத்தாக இருந்தீர். உமக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கும் பொருட்டே இக் கொடிய நோயை இறைவன் உமக்குத் தந்துள்ளார். விரைவில் நோய் நீங்கி நீடுவாழ்வீர். உம் தொண்டு சிறக்கும்" என வாழ்த்தினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வானூர்தி வழியே திருச்சிக்கு 10-6-51 இல் வந்து சேர்ந்தார். திருச்சி தில்லைநகர் திரு. தில்லைவேல் முதலியார் திருச்சியில் இருந்து நெல்லைக்குத் தொடர் வண்டியில் வாய்ப்பாகச் செல்வதற்குரிய வசதிகளை உண்டாக்கித் தந்தார். நெல்லைக்குச் சேர்ந்த பின்னர் மறுநாளே குற்றாலம் சென்று தங்குதல் நலம் பயக்குமெனப் போய்த் தங்கினார்.

குடும்பப் பொறுப்பு, கழகப்பணி ஆகியவற்றால் ஆங்குத் தொடர்ந்து ஓய்வு கொள்ள முடியவில்லை. எனினும் அதன் இயற்கையின்பமும், அருவிநீராட்டும், நல்ல ஓய்வும் விரைவில் உடல்நலத்தை அளித்தன. இரண்டரைத்திங்கள் ஆங்குத் தங்கி நலம் பெற்றபின் பாளைக்கு வந்தார். குடும்பம் பாளையிலேதான் இருந்தது. மேலும் அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆதலாதல் பழையபடியே நெல்லைக்கும், சென்னை க்குமாக அலைய நேரிட்டது. பத்துப்பாட்டு மாநாட்டுப் பணியும் சித்தாந்த மாநாட்டுப்பணியும் நடைபெற்றன. ஓரளவும் உடல்நிலை வலுப்பெற்று வேலை செய்வதற்கு ஒத்த நிலைக்கு வந்தது.

அகவை முதிர்ந்த அன்னை சுந்தரத்தம்மையாரின் உடல் வலு குறைந்துகொண்டே வந்தது. அவர்தம் உடல்நலக்குறை உள்ளத்தின் ஆழத்தில் பதிந்து கிடந்த ஆறாப் புண்ணால் வலுத்துக்கொண்டே வந்ததுபோலும்! "இளையவர்கள் இருந்து