பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21. செந்தமிழ்க் காவலர்

("மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பா னல்னோ')

சேக்கிழாரடிகள்

காவல் இருவகைப்படும். அவை அகக்காவல், புறக்காவல் என்பன. வீட்டுள் இருக்க வேண்டுபவை வெளியே போய் விடாமல் காக்கவும் வேண்டும். வீட்டுக்குக் கூறியவை நாட்டுக்கும் மொழிக்கும் பொருந்துபவையே.

நயத்தக்க சிற்பி ஒருவன் நாளும் நாளும் உள்ளம் அள்ளூறித் தான் விரும்பும் கலைத்திறமிக்க சிற்பங்களை யெல்லாம் உள்ளத்து உருவெழுதி உளியால் விளையாட விட்டு உருக்கொடுத்து, உயரிய பீடமமைத்து ஒப்பனை யெல்லாம் உவந்து செய்து ஓலக்கம் கொள்ள வைத்திருப்பது போலவும், மணியணிகளை வணிகம் செய்வான் ஒருவன், ஒளியும் உயர்வுமிக்க மணிகளைத் தேர்ந்து தேர்ந்து கலைத்திறம் வல்லாரால் கைவினை பொலியச் செய்வித்துக் காண்பார் கண்ணும் கருத்தும் ஒருங்கே கவருமாப் போலக் கவின் பேழைக்கண் தகுமாறு வைத்திருக்கும் தகவு போலவும் தமிழுக்கு உயிர்ப்பும் உறுப்பும் ஒளியும் உயர்வு மெல்லாம் ஒருங்கு சேர்க்கும் ஓராயிரத்து எழுநூற்றைம்பது நூல்களைத் தமிழன்னையின் திருவடிகளுக்கு அடியுறையக்கி 'அடியார்க்கும் அடியேன்" என நின்றிறைஞ்சி, அன்னை வாழ்க என் வாழ்த்துரைக்கும் அரும் பெருந்தொண்டர் வ.சு. அவர் களின் சீரியநூல் வெளியீட்டுப்பணி ஒன்றே இத் தமிழ் மண்ணில் பிறந்தார் எவர்க்கும் தாழாத காவல் வேந்தர் அவர் என்பதைக் காட்டற்குப் போதுமான எடுத்துக் காட்டாக, அவர் செய்து வரும் பிற காவற் கடமைகளும் மிகப் பலவாம். அவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளையமிடும். பொற்றொடர் (பொற் சங்கிலி) போன்றனவாம்.