பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

135

இதனை அடுத்துப் பேச்சு வழக்கில் மிகுதியாகப் பயன் படுத்தப் பெறும் பிறமொழிச் சொற்களை விலக்கும் பொருட்டு எடுத்துக் காட்டாக நூறு பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றுக்கு நேரான தூய தமிழ்ச் சொற்களையும் பொறித்துத் துண்டு வெளியீடு அச்சிட்டு நாடெங்கும் பரப்பினார் திரு.வ.சு.

இவ் வெளியீட்டைக் கண்ணுற்ற திரு. சி.பி. இராமசாமி ஐயர் ‘ தமிழ் எங்ஙனம் தனித்தியங்க இயலும்' என்று எள்ளி நகைத்து இந்துத் தாளில் எழுதினார். “இருக்கு வேதத்திலே ‘ஆணி’ என்னும் சொல் உள்ளது. அச் சொல்லைத் தமிழர் கடன் வாங்கினர், என்று ஆராய்ந்து பாராமல் மொழித் துறையில் புகுந்து விளையாடினார். அதற்கு வ.சு. ‘ஆணித்தரமான விடை’ என மறுப்பெழுதி அச்சிட்டு அவர்க்கு அனுப்பினார். பிறர்க்கும் வழங்கினார்.

இவ்வாறு அறிக்கைகள் வெளியிட்டு அரும்பணி செய்தற் கெனத் திரு.வ.சு. தம் இல்லத்தை அலுவலகமாக்கி அறிஞர் பெருமக்கள் சிலரைக் கலந்து ஆய்ந்து அவர்கள் துணையுடன் “தமிழறிஞர் கழகம்” என ஓர் அமைப்பினையும் உருவாக்கினார். அதன் ஆறாம் அறிக்கையை ஒரு சான்றாகக் காண்க. அது தனித் தமிழில் பேசுதற்கு எளியதொரு வகையைக் குறிப்பிடுகிறது.

தனித் தமிழில் பேசுதற்கு எளிதான முறை

இல்லங்களிலும் பள்ளிகளிலும் கழகங்களிலும் உண்டியல் வைத்துத் தனித் தமிழ் மக்கள் கலந்து பேசும் வடசொல் ஒவ்வொன்றுக்கும் காலணா தண்டம் போட உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும்.

பேச்சு வழக்கில் ஏறக்குறைய 300 வடசொற்களே மிகுதியாய்க் கலந்து பேசப்படுகின்றன. அவற்றிற்கு நேரான நல்ல தமிழ்ச சொற்கள் இருக்கின்றன. அத் தமிழ்ச் சொற்கள் பேசப்படா மையால் அவை வழக்கழிந்து ஒழிந்து வருகின்றன.

சோறு, தண்ணீர், முழுக்கு, நோய் என்ற தமிழ்ச் சொற்கள் ஒழிந்து சாதம், ஜலம், ஸ்நானம், வியாதி என்னும் வடசொற்கள் வந்துவிட்டனவன்றோ!. எனவே, கட்டுப்பாடாக நாம் வட சொற்களை நீக்கிப் பேச வேண்டியவர்களாகின்றோம்.