பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

141

பயிற்சிக்கு எள்ளளவேனும் இடமுண்டா?' என்று எழுதி யிருப்பது அடிகளார் கைவழி வந்திருக்குமா என்ற பெரியதோர் ஐயத்தை விளைவிக்கின்றது.

தேவார ஆசிரியர்களில் நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தர் உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றும், அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே என்றும் பாடியுள்ளார். திருநாவுக்கரசனாரும், அண்ணாமலை யுளானே நீதியால் நின்னையல்லால்நினையுமா நினைவிலேனே' என்றும், 'அண்ணாமலை கைதொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே' என்றும் பாடியுள்ளனர். தேவார காலத்தில் வழங்கப்பெற்ற ‘அண்ணாமலை என்ற தூய தமிழ்ப் பெயராகிய திருக்கோயில் பெயர் அருணாசலம்என்றும், உண்ணாமுலை என்ற இறைவியின் தூய தமிழ்ப் பெயர் அபிதகுசாம்பாள் என்றும் மாற்றப்பெற்ற பிற்காலத்திலேதான் சமஸ்கிருத நாமாவளி நம் திருக்கோயில்களில் புகுத்தப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடைமலை!

தமிழ்வழிபாட்டை நீதிமன்றத்திலே நிறுத்தித் தமிழ் நெஞ்சக் கொலைக்கு ஆளடிமைப்பட்டுக் கிடந்தவரைத் தமிழ் மக்கள் முன்னிலையில் நிறுத்தி வழக்குத் தொடுத்துள்ளார் திரு.வ.சு. மரபும் மாண்பும் எடுத்துரைத்து, மறைமலை யடிகளார்தொடர்பை உரைத்து, தம் கெழுதகை உறவை உரைத்து, அண்ணாமலையார் ஆணையை உரைத்து 'நீவிர்' செய்தது முறைதானா? என வினாவுகின்றார்.

“அண்ணாமலையாரிடத்திருந்து கழுவாய் பெற வேண்டுமானால் தாம் செய்த தவற்றை உணர்ந்து ஞானப் பிரகாச அடிகளாரே பிறர்க்கெல்லாம் வழிகாட்டியாகித் தமிழ் வழிபாட்டு இயக்கத்தைத்தாமே முன்னின்று வளர்த்தல் வேண்டும். தடைபடுத்த நினைக்கும்அவர் ஒதுங்கி நின்றேனும் உய்வாரா?” என்பது வ.சு. அவர்களின் உட்கிடையாக இருந்தது.

திரு. வசு.ஆழமாக எண்ணுவார். எண்ணியதைத் திண்ணமாக உரைப்பார். உரைத்ததை உரைத்தவாறு செய்தற்கு முனைவார், முடிப்பார்; சொல்வேறு செயல்வேறாம் இருநிலை அவர்பால் இருப்பது இல்லை!